சுவையான கீரை மோர் கூட்டு செய்வது எப்படி?

Keerai Mor Kootu Recipe- கீரை மோர் கூட்டு (கோப்பு படம்)
Keerai Mor Kootu Recipe - கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு செய்து போரடித்துவிட்டதா? வெயில் அதிகம் இருப்பதால், காரமாக சாப்பிட பிடிக்கவில்லையா? கோடையில் உடலைக் குளிர்ச்சியாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள்.அதுவும் கீரையை வழக்கமாக செய்வது போன்று பொரியல், கடையல் என்று செய்யாமல், கீரை மோர் கூட்டு செய்து சாப்பிடுங்கள். இந்த கூட்டு சாதத்துடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
கீரை மோர் கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள, கீரை மோர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* சிறுகீரை - 1 கட்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 டம்ளர்
* தயிர் - 1 கப்
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
தயிர் - 1/4 கப்
* அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* சிறிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
முதலில் கீரையை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, நீரில் அலசிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், தயிர், அரிசி மாவு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள கீரையை சேர்த்து, சிறிது உப்பு மற்றும் 1 டம்ளர் நீரை ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கீரை நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை கட்டிகளின்றி நன்கு அடித்து ஊற்றி கிளறி, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி, கீரையுடன் சேர்த்து கிளறினால், சுவையான கீரை மோர் கூட்டு தயார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu