செயற்கையாகப் பழுத்த மாம்பழங்கள்! விஷத்தை விலை கொடுத்து வாங்குகிறோம்
மாம்பழங்கள் (கோப்பு படம்)
மாம்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு சந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 150-ல் இருந்து 300 டன் வரை மாம்பழங்கள் வந்திறங்குகின்றன. அதிலும் குறிப்பாக, அல்ஃபோன்சா, செந்தூரம், பங்கனபள்ளி, இமாம் பசந்த், காளபாடி, கிளி மூக்கு, நடு சோலை, குதாதாத் உள்ளிட்ட சுமார் 15 வகையான மாம்பழங்கள் பெரும் அளவு வருகின்றன.
இந்த மாம்பழங்கள் அனைத்தும் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? இல்லை செயற்கையாகப் பழுக்க வைக்கப்படுகிறதா? இதை வாங்கி உண்ணலாமா? கூடாதா? குழந்தைகளுக்குத் தைரியமாகக் கொடுக்கலாமா? வேண்டாமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுகின்றது. அனைத்திலும் வியாபார நோக்கம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், லாபத்திற்காக மாம்பழ வியாபாரிகள் சிலர் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கின்றனர்.
குறிப்பாக, எத்தலின் , ரிபெனர் போன்ற இரசாயனங்கள் பவுடர் வடிவில் கிடைப்பதாகவும் அதேபோல, பழங்களைப் பழுக்க வைக்க மார்க்கெட்டில் ஸ்ப்ரேயர்கள் கிடைப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. அது மட்டும் இன்றி கால்சியம் கார்பைடு கற்களை வைத்தும் பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறது எனக்கூறப்படுகிறது.
செயற்கையாகப் பழுக்க வைத்த பழங்களை உட்கொள்வதால் வரும் பிரச்சனைகள்:
- வாயு தொல்லை
- நெஞ்செரிச்சல்
- வாந்தி
- வயிற்றுப்போக்கு
- தோல் ஒவ்வாமை
- மூச்சு திணறல்
- கண் எரிச்சல்
- தொண்டைப் புண்
- நுரையீரலில் நீர்கொர்தல்
- பசி இன்மை
- காலப்போக்கில் புற்று நோய்
- நரம்பு மண்டலத்திற்கும் தீங்கு
உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் மாம்பழங்களைக் கடையில் இருந்து வாங்கும்போது கவனம் தேவை.
செயற்கையாகப் பழுக்க வைத்த மாம்பழங்களை எப்படிக் கண்டறிவது.?
- பார்ப்பதற்கு பளபளவென கண்களைக் கவரும்
- அனைத்துப் பழங்களும் ஒரே அளவில் பழுத்திருக்கும்
- அனைத்தும் ஒரே மாதிரியான நிறத்தில் இருக்கும்
- முழுமையாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்
- மாம்பழத்தில் மணம் பெரிதாக இருக்காது
இயற்கையாகப் பழுத்த மாம்பழம் எப்படி இருக்கும்?
- முழுமையாகச் சீரான நிறத்தில் இருக்காது
- அனைத்துப் பழங்களும் ஒரே அளவில் பழுத்திருக்காது
- மாம்பழத்தின் நறுமணம் மூக்கை துளைக்கும்
- பழத்தின் சுவை நன்றாக இருக்கும்
அதையும் கடந்து பழங்களை வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் பேக்கிங் சோடா மற்றும் கொஞ்சம் சமையல் உப்பைப் போட்டு மாம்பழங்களை அதற்குள் 10 நிமிடம் போட்டு வையுங்கள்.
அதற்குப் பிறகு அதை எடுத்து கைகளால் சுத்தமாகத் தேய்த்துக் கழுவுங்கள். பிறகு நல்ல தண்ணீர் ஊற்றிக் கழுவி உட்கொள்ளுங்கள். முடிந்தவரை, பழத்தின் தோலை அகற்றி விட்டு உள்ளே இருக்கும் சதைப் பகுதியைத் துண்டுகளாக்கிச் சாப்பிடலாம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu