சொத்து பத்திரத்தில் திருத்தம் செய்வது எப்படி? பிழை திருத்தல் பத்திரம்

தமிழ்நாட்டில் சொத்து ஆவணங்கள் பதிவு செய்தவர்கள் சிறிய பிழை இருந்தால் திருத்தம் செய்து கொள்வது அவசியம்.. அப்படி செய்யாமல் போனால் பின்னாளில் சிக்கல் ஏற்படலாம்..இந்த பதிவில் சொத்துப் பத்திரத்தில் பிழை திருத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
சொத்து பத்திரம் என்பது ஒருவர் தன் வாழ்நாளில் மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம். அதில் மூல ஆவணத்தின் விவரங்கள், தேதி, பத்திர எண், சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரியாக குறிப்பிடட்டிருக்க வேண்டும். இதேபோல் முழுப் பெயர், அடையாள அட்டை, ரேஷன் கார்டில் உள்ள முகவரி, சொத்தினை விற்பனை செய்தவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், அவரது அடையாள அட்டை மற்றும் மூல ஆவணத்தில் உள்ள விவரங்கள் சரியாக என்பதை நீங்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும்.
சொத்துப்பத்திரம் பதிவு செய்துவிட்டோம். இனி ஜாலி தான் என்று அதை சரியாக கவனிக்காமல் விட்டுவிடாதீர்கள்.. பட்டா சரியாக இருந்தாலும், பத்திரமே உங்களிடம் இருந்தாலும் சொத்து விவரம், சொத்தின் விஸ்தீரணம், சர்வே எண்கள், உட்பிரிவு எண், கிராம எண், பெயர், பிளாக் எண் போன்றவை சரியாக குறிப்பிடாமல் தவறுதலாக குறிப்பிட்டிருந்தால் அது உங்களுக்கு சிக்கல் ஆகிவிடும். குறிப்பாக தட்டச்சு காரணமாகவோ, பழைய எண், புதிய எண், குழப்பத்தினாலோ, லே அவுட் பெயர் மாறினாலோ பின்னாளில் யாருக்காவது விற்கும் போது பெரிய குழப்பம் ஏற்படும்..அது தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கும்.
எனவே ஒரு வேளை தவறுதலாக சொத்துப்பத்திரத்தில் பிழைகள் ஏற்பட்டுவிட்டதாக தெரியவந்தால் தாமதிக்காமல் உடனே திருத்த வேண்டியது அவசியம் ஆகும். பத்திரம் பதிவு செய்யும் முன்பு பத்திரங்களை சரியாக படிக்காமல் விட்டுவிட்டால் அதனை திருத்தம் செய்வதற்கு ஒரே வழி தான் உள்ளது. உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி கொடுத்த அதே நபரால் அந்தப் பிழையைத் திருத்த முடியும். அவர்அதற்கு விரும்ப வேண்டும். அப்படி அவர் பிழையை திருத்த தயாராக இருந்தால் 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்க அதனை செய்ய வேண்டும்.
ஒரு வேளை நீங்கள் சொத்து வாங்கி பல வருடம் ஆகிவிட்டது. அதில் வீடு கட்டி குடியிருந்து வருகிறீர்கள். ஆனால் இப்போது தான் அந்த சொத்தில் உள்ள பிழைகளை பார்த்தீர்கள் என்றாலும்இ பிழை திருத்தல் கண்டிப்பாக அவசியம் ஆகும். உங்களுக்கு விற்பனை செய்திருந்த நபர், பிழையைத் திருத்தி பத்திரம் பதிவு செய்துதர தயாராக இருக்க வேண்டும். அவரிடம் சொல்லி பத்திர ஆபிசுக்கு வரச்சொல்லி, 'பிழை திருத்தல் பத்திரம்' (Rectification Deed) வாங்கி, அந்தப் பிழையை சரிசெய்து கொள்வதுதான் உங்களுக்கு நல்லது. அப்படி ஒருவேளை நீங்கள் பத்திரத்தில் பிழைகளை சரி செய்யாமல் போனால், சொத்து விவரமும், நீங்கள் வாங்கும் பட்டாவும் ஒரே மாதிரி இருக்காது. பத்திரமும், பட்டாவும் நீங்கள் வாங்கி சொத்தின் அளவுடன் ஒத்துபோகாது. எனவே பிழைகளுடன் அந்த சொத்தினை வேறு யாருக்காவது விற்பனை செய்ய முயற்சித்தால் அது சிக்கலாகும். அவர் ஒரு வேளையை பிழையை காரணம் காட்டி சொத்தை வாங்க மறுக்கலாம். அல்லது சொத்தை அடிமாட்டு விலைக்கு கேட்கலாம்.
எனவே சொத்தில் தவறுகள் இருந்தால் அதனை சொத்தை எழுதிக்கொடுத்தவரை வைத்து திருத்திக்கொள்ளுங்கள். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பொதுவாக பிழை திருத்தம் செய்ய அதிக முத்திரை கட்டணம் செலுத்த தேவையில்லை.. அதேநேரம் சொத்து விஸ்தீரணத்தின்(அளவு) வேறுபாடு இருந்தால் வித்தியாசப்படும் விஸ்தீரணத்தின் முத்திரைத் தீர்வையாக, அரசு நிர்ணயம் செய்துள்ள வழிகாட்டி மதிப்பீட்டின்படி (Guide Line Value) நீங்கள் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். ஒருவேளை தவறை கழித்து நீங்கள் பிழையை கண்டுபிடித்திருந்தால், அரசு வழிகாட்டி மதிப்பு தற்போது எவ்வளவு உள்ளதோஅதற்கு ஏற்றார் போல் முத்திரைத் தீர்வையை உரிய கட்டணத்துடன் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
எனவே, பத்திரம் எழுதியபிறகு மிககவனமாக படித்து பாருங்கள், குறிப்பாக மூலப்பத்திரத்திலும், எழுதிய சொத்து ஆவணமும் சரியாக உள்ளதா என்பதை பாருங்கள்.. இல்லாவிட்டால் தேவையற்ற மனஉளைச்சல் உங்களுக்கு ஏற்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu