வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்ற உணவு வகைகள் எது?

வெயிலில் இருந்து தப்பிக்க ஏற்ற உணவு வகைகள் எது?
X

பைல் படம்.

மார்ச் தொடக்கத்திலேயே, பகல் நேரத்தில் வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வெயில் வந்துவிட்டது.

கோடைக் கால பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் உடல் வெப்பத்தினால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவதிப்படுவர். உடல் உஷ்ணம், உடலில் நீர்ச்சத்து இல்லாமை, உணவுப்பழக்கத்தினால் வயிற்றுக் கோளாறு என பல உடல் உபாதைகள் ஏற்படும். எனவே, கோடைக் காலத்தில் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்த்து, உடலுக்கு சக்தி தரும் நீர்ச்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் கோடைக் காலத்தில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய நீர் ஆகாரங்கள், உணவுகளை ஒருமுறை ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள். தண்ணீர் குடிக்கும் ஒரு நல்ல பழக்கம் இன்று பலருக்கும் இருப்பதில்லை. ஆனால் கோடைக் காலத்தில் கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள். நாள் ஒன்றுக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். கோடைக் காலத்தில் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீரேற்றத்தை இது தக்கவைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்.

இளநீர்:

வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைக்கவும் சிறுநீர் கடுப்பு உள்ளிட்ட பிரச்னையால் அவதிப்படுவோரும் இளநீர் அருந்தவேண்டும். உடல் சூட்டைத் தணிப்பதில் இளநீருக்குத் தான் முதலிடம்.

எலுமிச்சைச் சாறு:

குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பானம். உடல் உஷ்ணத்தைக் குறைக்க எலுமிச்சை சாறில் சிறிது உப்பும் கலந்து அருந்த வேண்டும். தாகத்தையும் குறைக்கும் என்பதால் தினமும் அருந்தலாம்.

மோர்:

இதுவும் எளிமையாகக் கிடைக்கும் பானம் என்பதாலும் கால்சியம் உள்ளிட்ட சத்துகள் நிறைந்திருப்பதாலும் தினமும் ஒரு டம்ளர் மோர் அருந்தலாம்.

பழங்கள்:

கோடைக்காலத்திற்கென்று சீசன் பழங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. தர்பூசணி, கிர்ணி பழங்களை அப்படியே சாப்பிடலாம். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களும் இதனை சாப்பிடலாம். பழங்களை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் பழச்சாறுகளாக அருந்தலாம்.

காய்கறிகள்:

கோடையில் நீர்ச்சத்து கொண்ட காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காய், சௌசௌ, பூசணிக்காய், பரங்கிக்காய், கோஸ், கேரட், பீன்ஸ் ஆகிய வற்றைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காய் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பிராய்லர் சிக்கன் உடலுக்கு சூடு என்பதால் அதனை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்கவும். பதிலாக மீன் சாப்பிடலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து குழம்பு வைத்து சாப்பிடலாம்.

சீரகம், வெந்தயம்:

வெயில் காலத்தில் சாதாரண தண்ணீருக்குப் பதிலாக சீரகம் கொதிக்க வைத்த நீரை அருந்தலாம் அல்லது வெந்தயம் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!