சமையல் எண்ணெயில் கலப்படம்.. எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்!

சமையல் எண்ணெயில் கலப்படம்.. எச்சரிக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்!
X
நாம் பயன்படுத்தும் சமையல் எண்ணெயில் கலப்படம் இருக்கலாம் என உணவு பாதுகாப்பு அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நவீன உலகில் சமையலுக்கு இந்த எண்ணெய் பயன்படுத்தும் எண்ணெய் எப்படி தேர்வு செய்வது? என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்கையில், கலப்பட சமையல் எண்ணெய் குறித்து உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவை பார்ப்போம்:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உணவு எண்ணெயில் சிறப்பு கள ஆராய்ச்சி ஒன்றை கடந்த 2020 ஆம் ஆண்டில் நடத்தியது. அதன் அடிப்படையில், எண்ணெயில் எந்த மாதிரியான கலப்படங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்தும், சட்ட அம்சங்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.


கலப்படத்தினை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். நுகர்வோரை ஏமாற்றுவதற்கு மட்டும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்காத விலை மலிவான உணவுப் பொருளைக் கொண்டு (substance not injurious to health), அதே வடிவிலான விலை உயர்வான உணவுப் பொருளுடன் கலப்பது ஒரு வகை. (உதாரணாக கடலை எண்ணெயில் பாமாயில் கலப்படம்). உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், விலை மலிவான உணவற்ற பொருளை, உணவுப் பொருளுடன் கலப்பது மற்றொரு வகை. (உதாரணாக உணவு எண்ணெய்களில் அர்ஜிமோன் ஆயில் கலப்படம்).

தமிழகத்தை பொறுத்த வரை, உணவு எண்ணெயில் அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பாமாயிலின் வகைகள் (Palmolien, Olien etc.,) ஆகும். ஆனால், அதேவேளையில், நுகர்வோருக்கு ஏற்ற விலையில், கொழுப்புச் சத்து சீராகக் கிடைக்க வேண்டும் என்பதிற்காக, FSSAI மூலம் அனுமதிக்கப்பட்டு, அக்மார்க் சான்றுடன் உரிய லேபிள் விபரங்களுடன் வரும் கூட்டுத் தாவர எண்ணெய் (Muti-Sourced Edible Oil) ஆனது கலப்படம் என்ற வரையறையில் வராது.


பாமாயில் விலை குறைவானதால், சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலுடன் (Refined Palmolien or Olien), சிறிதளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து, கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் என்ற பெயரில் நம்மை ஏமாற்றிவிடும் வாய்ப்பு உள்ளது. எனவேதான், அரசு உணவு எண்ணெயை லேபிளின்றி சில்லறை விற்பனையில் விற்க தடை செய்துள்ளது.

அதுபோல், மற்றொரு மலிவு விலை எண்ணெயான, நாய்கடுகு எண்ணெய் (Argimone Oil) என்ற எண்ணெயை உணவு எண்ணெயுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. எனவேதான், இந்த எண்ணெயின் கலப்படம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து உணவு எண்ணெயின் பொட்டலங்களிலும், “Free from Argimone Oil” என்ற உறுதிமொழி வாக்கியத்தை FSSAI கட்டாயமாக்கி உள்ளது.

லேபிளில் அர்ஜிமோன் எண்ணெய் இல்லையென்று தெரிவித்தும், எண்ணெய் பொட்டலத்தில் அர்ஜிமோன் ஆயில் இருப்பது கண்டறியப்பட்டால், கலப்படத்திற்கு மட்டுமின்றி, தவறான தகவல் வழங்கியதற்கும், நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதற்கும் வழக்கு பதிவு செய்யப்படும்.

மினரல் ஆயில் என்பது லிக்விட் பாரபின் ஆகும். அது இரண்டு வகையில் உள்ளது. ஒன்று தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கானது (Industrial Grade) மற்றொன்று உணவுத் தரம் வாய்ந்தது (Food Grade). லிக்விட் பாரபின்னை மருத்துவத் துறையில் லேக்ஸேட்டிவ்வாகப் பயன்படுத்துகின்றனர்.

Mineral Oil (High Viscosity - INS: 905d) மற்றும் Mineral Oil (Low Viscosity - INS: 905e) ஆகியவற்றை, மெருகூட்டல் பொருளாகப் (Glazing Agent) பயன்படுத்த FSSAI அனுமதித்து, அதற்கான தரங்களை நிர்ணயித்துள்ளது. (That means, Food Grade Mineral Oil is a permitted food additive).


ஆனால், உணவுத் தர மினரல் ஆயிலாக இருந்தாலும் சரி, தொழிற்சாலைக்கான உணவுத் தரமில்லாத மினரல் ஆயிலாக இருந்தாலும் சரி, அவற்றை உணவு எண்ணெயில் சேர்க்கக்கூடாது என்பது FSSAI-ன் முக்கிய விதியாகும். உணவு எண்ணெயில் மினரல் ஆயில் கலப்படத்தினைக் கண்டறிய உணவுப் பகுப்பாய்வு டெஸ்ட்கள் உண்டு. ஆதலால், கவலை வேண்டாம்.

2020 ஆம் ஆண்டு FSSAI நடத்திய ஆய்வில், தமிழகத்தில் இருந்து எடுக்கப்பட்ட எந்த உணவு எண்ணெய் மாதிரியிலும் மினரல் ஆயில் கலப்படம் கண்டறியப்படவில்லை. 2022 ஆம் ஆண்டிலும் FSSAI அந்த மாதிரியான ஆராய்ச்சி நடத்தி முடித்து உள்ளது. ஆய்வறிக்கை விரைவில் வெளியாகும்.

நன்கு சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி அல்லது ரைஸ்பிரான் எண்ணெய் பார்ப்பதற்கு தண்ணீர் போலும், மனமற்று உள்ளதாலும், அதனை மினரல் ஆயில் என்று சில நபர்கள் தவறான தகவலைப் பரப்புகின்றார்கள். உணவு எண்ணெயில், அதிலும் குறிப்பாக கடுகு எண்ணெய் மற்றும் சில சமயங்களில் நல்லெணையில், “Tri-Ortho-Cresyl-Phosphate (TOCP)” என்ற வேதிப்பொருளை, எண்ணெயின் நிறத்தினை அதிகப்படுத்திக் காண்பிக்க பயன்படுத்துவார்கள்.

TOCP-யை கண்டறிய வீட்டிலேயே சோதனை செய்யலாம். 2-5 மில்லி எண்ணெயை கண்ணாடி டம்ப்ளரில் எடுத்துக் கொண்டு, அதில், சிறிதளவு “Yellow Butter”-யை போட்டால், எண்ணெயின் நிறம் மாறாது இருந்தால் அதில் TOCP சேர்க்கப்படவில்லை என்று பொருள். ஒருவேளை, எண்ணெயின் நிறம் “சிவப்பாக” மாறினால், அந்த எண்ணெயில், TOCP கலப்படம் உள்ளது என்று பொருள். உடனடியாக, அதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.

எனவே, பொதுமக்களாகிய நாம், மிகவும் கவனமுடன் பொட்டலமிடப்பட்ட உணவு எண்ணெயை மட்டும் வாங்கி, குறைந்த அளவிலும், ஒருமுறை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், உணவு எண்ணெயில் ஏதேனும் கலப்படம் உள்ளதாக சந்தேகித்தால், அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையை அணுக வேண்டும் என மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!