இறைவனுக்கு நாம் ஏற்றும் நெய் தீபத்தில் நெய் கிடையாதா?.. அதிர்ச்சி தகவல்கள்....

இறைவனுக்கு நாம் ஏற்றும் நெய் தீபத்தில் நெய் கிடையாதா?.. அதிர்ச்சி தகவல்கள்....
X

நெய் தீபம்.

கோயில்களில் இறைவனுக்கு நாம் ஏற்றும் நெய் தீபத்தில் நெய் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை உணவு பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ளார்.

இறைவனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது என்பது ஒரு முறை ஆகும். ஆனால், இன்றைய கலப்பட உலகில் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படும் நெய்யிலும் கலப்படம் உள்ளது என்றே கூறலாம். அதே சமயத்தில் நெய் தீபத்தில் நெய்யே பயன்படுத்துவது இல்லை என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட பதிவுகள் இதோ:

தீப நெய் உணவிற்கான பயன்பாட்டிற்கு அல்ல எனும் போது, உணவு பாதுகாப்புத் துறையின் கடமை இதில் என்ன உள்ளது என்று, இந்தப் பதிவைப் படிப்பவர்களுக்கு ஐயம் எழுவது இயற்கை தான். ஆனால், அதற்கு என்னிடம் இரண்டு பதில்கள் உள்ளது. கடந்த ஆண்டு முதல் தீபம் உள்ளிட்ட உணவற்ற தேவைகளுக்குப் பயன்படும் எந்த வகை உணவுப் பொருட்களின் லேபிள் விபரங்களையும் உணவு பாதுகாப்புத் துறை கண்காணிக்க வேண்டும் என்பது முதல் பதில்.


அடுத்தது, தீப நெய் என்பதில் “நெய்” என்ற அடையாளப் பெயரின் காரணமாக, அதனை தவறுதலாக உணவாகப் பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், அதனைத் தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை உணவு பாதுகாப்புத் துறைக்கு உள்ளது. ஒரு மளிகைக் கடையில் திடீர் ஆய்வு செய்த போது, எதேச்சையாக எனது கண்ணில்பட்டது, முழு முகவரியின்றி வெறுமனே “ஊத்துக்குளி” என்று மட்டும் முகவரியாகக் குறிப்பிடப்பட்டு, “ஶ்ரீ கிருஷ்ணா நெய்” என்ற பெயரில் பொட்டலமிடப்பட்டு இருந்த நெய் பாக்கெட்.

மேலும், அந்த நெய் பொட்டலத்தின் பின்பக்கத்தில், “தீபத்திற்கு மட்டும்” என்று மிகச் சிறிய எழுத்தில் எழுதப்பட்டு இருந்தது. அந்த மளிகைக் கடைக்காரரை சற்று சிரத்தையெடுத்து விசாரித்ததில், நான் பார்த்த நெய் பொட்டலத்தின் உற்பத்தியிடம், அக்கடை இருக்கும் அதே பகுதியின் அருகில் இருந்ததையும் அறியநேர்ந்தது. உடனே அங்கு ஆய்விற்குச் சென்றோம்.

அந்த தீப நெய் உற்பத்தி செய்யப்பட்ட இடம், ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்த சிறிய ஓடு வேய்ந்த வீடு. அந்த தீப நெய்யைத் தயாரித்தவர், ஒரு ஏழ்மையான வயதான மனிதர். அன்னாரிடம் அவர் செய்வது முறையற்ற வணிகம் என்பதை எடுத்துக் கூறினாலும், உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்து, தொடர் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் அது போல நான்கு இடங்களைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுத்தோம்.


தீப நெய் என்ற பெயரில் தயாரிக்கப்படும் ஒரு பொருளின் உள்ளடக்கப் பொருள் (Ingredients) என்பது வனஸ்பதி, பாமாயில், உணவுத் தர செயற்கை மஞ்சள் நிறமி மற்றும் தொழிற்சாலை தர நிறமி, செயற்கை வாசனை திரவியம். பெரும்பாலான தீப நெய்யில், மருந்து அளவிற்குகூட நெய் சேர்க்கப்படுவது இல்லை. தீப நெய்யில், நெய் என்ற பதமும், நெய்யின் பதமும் இருந்தாலும், நெய்யே அதில் இல்லாததினால், நேற்றைய பதிவில் சொன்ன எந்தச் சோதனையிலும், தீப நெய் தேராது.

தீப நெய்யில், நெய் என்ற பெயர் மட்டுமே உண்டு என்பதால், அதனை அவசரத் தேவைக்கு கூட உணவிற்குப் பயன்படுத்துவது ஏற்றது அல்ல. ஏனெனில், தீப நெய்யில் செயற்கை வாசனை திரவியம் மற்றும் தொழிற்சாலை தர நிறமி உள்ளது. அதனால், வயிற்றுப் பிரச்சினை உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்.

நெய்யே இல்லாத ஒரு பொருளினை (பெரும்பாலும்), “தீப நெய்” என்று பெயரிட்டு, இறைவனுக்கு தீபம் ஏற்றுவது என்பது, நம்மை நாமே மட்டுமல்ல, இறைவனையும் ஏமாற்றும் செயலாகும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், இறைபக்தியில் நேர்மையைக் கடைப்பிடிக்கவும், சிறிதளவு உணவு நெய்யை மட்டும் வாங்கி தீபம் ஏற்றுவோம். அது வீடாக இருந்தாலும் சரி, வழிபாட்டு ஸ்தலமாக இருந்தாலும் சரி என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil