சமையலறையில் நெய் பாதுகாப்பு: உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையை படியுங்கள்...

சமையலறையில் நெய் பாதுகாப்பு: உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையை படியுங்கள்...
X
சமையலறையில் நெய் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து உணவு பாதுகாப்பு துறை அலுவலர் விளக்கம் அளித்து உள்ளார்.

இன்றைய உணவு முறையில் பாரம்பரியமான பொருளாக பயன்படுத்தும் பொருள்களில் நெய் பிரதமான இடத்தை பிடிக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நமது உணவில் நெய் முக்கிய இடம் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாது, நெய் இறை வழிபாட்டிலும், வீட்டு விசேச நிகழ்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. நெய் பயன்பாடு, நெய் பாதுகாப்பு குறித்து இன்னும் மக்களுக்கு சரியான புரிதல் இல்லை என்றே கூறலாம்.

அந்த வகையில், நெய் என்றால் என்ன, எப்படி வீட்டில் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:


நெய் என்பது பால் மற்றும் அதில் இருந்து எடுக்கப்படும் வெண்ணெயில் இருந்து (Milk & Butter) மட்டுமே எடுக்கப்படும் பொருளாகும். அதாவது, தண்ணீர் மற்றும் கொழுப்பற்ற திடச்சத்துகளை நீக்கிய பின்னர் கிடைக்கும் கொழுப்புச்சத்து (>99% Fat) நிறைந்த பால் பொருள்தான் நெய் ஆகும். நெய்யில் வைட்டமின் -ஏ மற்றும் இ மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் குறிப்பிட்ட அளவு உள்ளது.

ஒரு மேஜைக் கரண்டி (15 கிராம்) நெய்யில் 130 கிலோ கலோரிஸ் உள்ளதால், தினம் 2-3 தேக்கரண்டி மட்டும் நெய் சேர்த்தல் நலம். உணவு எண்ணெய் குறைவாக எடுத்தால், நெய்யை சற்று அதிகரிக்கலாம். தாவர எண்ணெய் வகைகளில் இருந்து தயாரிக்கப்பட்டதாகச் சொன்னால், அது நெய் கிடையாது. நெய் என்பது விலங்கு பாலிலிருந்து (only from Animal Milk) மட்டுமே தயாரிக்கப்படுவதாகும். வீகன் நெய் (Vegan Ghee) என்பதும் நெய் கிடையாது. அது தவறான மார்க்கெட்டிங் யுக்தி.


இறக்குமதி செய்யப்பட்ட நெய்யாக இருப்பின் அக்மார்க் முத்திரை அவசியம். நெய்யுடன் எந்தவொரு உணவுக் கூடுதல் சேர்மங்களைச் (Food Additives) சேர்க்கவும், பால் தவிர மற்ற எவற்றில் இருந்தும் பெறப்பட்ட கொழுப்பு உள்ளிட்ட எந்தவிதப் பொருட்களை கலப்பதற்கும் அனுமதியில்லை. நெய்யை பாதுகாக்க சிறந்த கொள்கலன் கண்ணாடி பாட்டில் சிறந்தது ஆகும். அதிலும் குறிப்பாக கலர் கண்ணாடி (Dark Colour Bottles) பாட்டில்கள் மிகச் சிறந்தது. கண்ணாடி பாட்டில் இல்லையென்றால், உணவுத் தர ப்ளாஸ்டிக் பாட்டில் பயன்படுத்தலாம்.

நெய் உள்ள பாட்டிலை காற்றுப் புகாமல் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும். இல்லையெனில், நெய் சீக்கரமாக கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. அதுபோல, நெய்யை அதிக வெளிச்சம் இல்லாத, ஈரப்பதம் இல்லாத, வெப்பம் இல்லாத சற்று குளிர்ந்த பகுதியில் வைத்திருக்க வேண்டும். நீண்ட நாட்களுக்கு நெய்யை இருப்பு வைக்க உலோகக் கொள்கலன்கள் ஏற்றதில்லை.


நெய்யைத் திறந்த நிலையில் வைத்திருக்கக்கூடாது. நெய் பாட்டிலில் ஈரமான கரண்டியைவிட்டு எடுக்கக் கூடாது. அப்படி, ஈரமான கரண்டி பயன்படுத்தினால், நெய் சீக்கிரம் கெட்டுவிடும். நெய்யை பாட்டிலில் இருந்து எடுக்க கண்ணாடி அல்லது உலோகக் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நெய் பாட்டிலினுள் கைவிட்டு நெய்யை எடுக்கக்கூடாது. மீறினால், நெய் எளிதில் கெட்டுவிடும்.

பாதுகாப்பான சூழலில் இருப்பு வைக்கப்பட்ட நெய்யில், கருப்பு புள்ளிகள் தென்பட்டால், ஒரு சுத்தமான பாத்திரத்தில் கொட்டி உருக்க வேண்டும். உருக்கிய பின்னர் வடிகட்டி, மற்றொரு சுத்தமான மற்றும் உலர்ந்த பாட்டிலில் ஊற்றி, பாதுகாப்பாக இருப்பு வைக்க வேண்டும். நாம் பாதுகாப்பற்ற வகையில் நெய்யைக் கையாளுவதால், வரக்கூடிய அழுக்குத் துகள்கள் தான் அந்த கருப்பு புள்ளிகள் என மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!