சமையல் எண்ணெய் பயன்படுத்தும் முறை: உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையை கேளுங்க...

சமையல் எண்ணெய் பயன்படுத்தும் முறை: உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனையை கேளுங்க...
X

சமையல் எண்ணெய். (மாதிரி படம்).

சமையல் எண்ணெய் பயன்படுத்தும் முறை குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.

சமையலுக்கு பயன்படுத்துவம் எண்ணெய் வகைகள் குறித்து அன்றாடம் பல்வேறு தகவல்கள் இறக்கை கட்டி பறந்து வருகின்றன. மேலும், உணவு எண்ணெய் பயன்படுத்தும் முறைகள் குறித்து இன்னும் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. அந்த வகையில், உணவு எண்ணெய் பயன்பாடு, பயன்படுத்திய எண்ணெயை பாதுகாப்பாக அப்புறப்படுத்துதல் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:


செலவைக் குறைப்பாதாகக் கருதியும், உணவுப் பொருட்களை வீணடிக்கக்கூடாது என்று கருதியும், நம்மில் சில வீடுகளில் எண்ணெய் தீய்ந்து கருப்பாக மாறும் வரை பயன்படுத்துவோம். ஆனால், உணவு எண்ணெயை அதிகம் பயன்படுத்தும் போது வரும் நோய்களைவிட, எண்ணெயைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்தி பயன்படுத்துவதால் தான் நோய்தாக்கம் அதிகரிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கத் தவறிவிட்டோம்.

உணவு எண்ணெயை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும். அதாவது, ஒரே வகை உணவு எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தாமல், மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு நபர் 4 தேக்கரண்டிகளுக்கு மிகாமல் உணவு எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். ஒருமுறை பயன்படுத்தி மீதமான எண்ணெயை, அதிகபட்சம் இரண்டு முறைக்கு மேல் திரும்ப சூடுபடுத்தி் பயன்படுத்தக்கூடாது என்று இருந்தாலும், “எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவதான் உடல் நலத்திற்குச் சிறந்தது”.


பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால், எண்ணெயில் “Total Polar Compounds” என்ற கெட்ட கொழுப்புகள் அதிகரித்து, ரத்தநாளத்தில் கொழுப்பு படிமம் ஏற்பட்டு, அத்திரோஸ்கிலிரோஸிஸ், இதய நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் உருவாகும். அதிக வெப்பநிலையில் மீண்டும் மீண்டும் உணவு எண்ணெயை சூடுபடுத்திடும் போது, “அக்ரிலமைடு” என்ற புற்றுநோய் காரணி உருவாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, பொறிப்பதற்காக உணவு எண்ணெயை ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது சிறந்தது.

ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்த நேரிட்டால், அதிகபட்சம் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்திடல் வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை திரும்பப் பயன்படுத்த நேரிட்டால், அதனை வடிகட்டிப் பயன்படுத்த வேண்டும். ஒருமுறை அப்பளம், சிக்கன் போன்ற உணவுகளைப் பொறிப்பதற்கு பயன்படுத்திய எண்ணெயை, மறுமுறை பயன்படுத்த நேரிட்டால், அதனை கூட்டு, குழம்பு போன்றவற்றை சமைக்கப் பயன்படுத்தலாம். மறுபடியும் பொறிக்கப் பயன்படுத்தக் கூடாது.


எண்ணெய் சூடுபடுத்தும் போது, சாம்பல்நீல நிறத்தில் புகை வந்தாலோ, அடர்த்தியான நுரை வந்தாலோ, எண்ணெய் கருத்துவிட்டாலோ அதனைப் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்திய எண்ணெயுடன் புதிய எண்ணெயை சேர்த்து இருப்பு வைக்கவோ அல்லது அடுப்பில் சூடாக இருக்கும் புதிய எண்ணெயுடன் மேலும் புதிய எண்ணெயை சேர்க்கவோ அல்லது பழைய பயன்படுத்திய எண்ணெயை சேர்க்கவோ கூடாது.

பயன்படுத்தி மீதமான எண்ணெயை, தனியாக இருப்பு வைத்து, பயோடீசல் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்றுவிடலாம். அதற்கென்று, அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ஸிகள் உள்ளன. பயன்படுத்தி மீதமான எண்ணெயை லிட்டர் ரூ.40-60 வரை எடுத்துக்கொள்வார்கள். பயன்படுத்திய எண்ணெய் மிகவும் குறைவாகத்தான் மீதமாகின்றது எனில், அதனை கழிவுநீர் வாய்க்காலில் கொட்டாமல், மணல் அல்லது காகிதம் அல்லது டிஸ்யூ பேப்பர் ஆகியவற்றுடன் கலந்து, குப்பைத் தொட்டியில் தான் போட வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!