பரோட்டா சாப்பிடலாமா? உணவு பாதுகாப்பு அலுவலரின் விளக்கத்தை படியுங்கள்...
பரோட்டா. (மாதிரி படம்).
நமது வாழ்வில் தவிர்க்க முடியாத உணவில் ஒன்றாக பரோட்டாவும் இணைந்து விட்டது என்றே கூறலாம். பரோட்டா சாப்பிட்டால் நோய்கள் வரும் என பரவும் தகவல்கள் பரோட்டா பிரியர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதன் உண்மை என்ன? பரோட்டா சாப்பிடலாமா? என உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கத்தை பார்ப்போம்:
மைதாவில் இருந்து தயார் செய்யப்படும் பரோட்டாவை சாப்பிடலாமா? கூடாதா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. வீட்டிலோ அல்லது உணவகத்திலோ பரோட்டா சாப்பிடுவது சரியா என்பது குறித்த ஆய்வினை, வெறும் மைதாவை மட்டும் கருத்தில்கொண்டு, மேற்கொள்வது சரியல்ல. பரோட்டா மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் முட்டையின் தரம்.
பரோட்டா மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மற்றும் பரோட்டாவை வேக வைக்கப் பயன்படுத்தப்படும் உணவு எண்ணெய்யின் வகை, அளவு மற்றும் அதில் உள்ள நிறைவுற்ற கொழுப்பின் அளவு. பரோட்டாவை வேகவைக்கப் பயன்படுத்தப்படும் உணவு எண்ணெய் புதியதா அல்லது ஏற்கனவே சூடுபடுத்தி, பின்னர் ஆற வைத்த எண்ணெயா? என தெரிந்து கொள்வது அவசியம்.
நாம் சாப்பிடும் பரோட்டா அப்போது புதிதாக தயாரிக்கப்பட்டதா? அல்லது ஆறிய அல்லது முதல் நாள் தயாரித்த பரோட்டாவை சூடுபடுத்தி வழங்கப்பட்டதா?, பரோட்டா உடன் வழங்கப்படும் ‘சால்னா’ உள்ளிட்ட பக்கவாத்தியங்களை எடுத்துக் கொள்ளும் அளவு என பல காரணிகள் அனைத்தையும் கருத்தில்கொண்டுதான் பரோட்டா சாப்பிடலாமா? என்பதை தீர்மானிக்க முடியும்.
மைதாவுடன் தரமான முட்டையுடன் கலந்து, குறைவான நிறைவுற்ற கொழுப்பு உள்ள தாவர எண்ணெயை புதிதாகப் பயன்படுத்தி, பரோட்டாவை வேகவைத்த அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள், நமது கலோரி தேவைக்குள் அளவுடன், தினமும் அல்லாமல், சீரான கால இடைவெளியில் உணவு சுழற்சி முறையில் சாப்பிட்டால், உடல் நலக்கோளாறு வரும் வாய்ப்பு இல்லை.
ஆனால், உணவகங்களில் பரோட்டா தயாரிக்க, நிறைவுற்ற கொழுப்பு அதிகமுள்ள உணவு எண்ணெயை அல்லது ஏற்கனவே பயன்படுத்திய பழைய உணவு எண்ணெயைத்தான் பயன்படுத்துவார்களோ? பேக்கரிக்கான மைதா தான் பயன்படுத்துவார்களோ? என்ற சந்தேகம் நுகர்வோருக்கு இருக்கின்றது. எனவே, பேக்கரி உணவு சாப்பிடுவது போல், உணவகங்களில் பரோட்டாவை குறைந்த எண்ணிக்கையில் என்றோ ஒரு நாள் சாப்பிடலாமேயோழிய, தினசரி உணவாக சாப்பிடக்கூடாது. மீறினால், வயிற்று உபாதை, உடல் பருமன் உள்ளிட்ட உடல் உபாதைகள் நம்மை நோக்கி விரைவாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
மைதாவில் ‘அலோக்ஸான்’ சேர்ப்பது அனுமதிக்கப்படவில்லை என்பதால், மைதாவிற்கும் நீரிழிவு நோய்க்குமான நேரடித் தொடர்பு தற்போதைய ஆய்வுகளில் உறுதி செய்யப்படவில்லை. ஆனால், மைதா அடிப்படையிலான உணவுகளுடன் எடுத்துக் கொள்ளும் மற்ற வகை உணவையும், உடற்பயிற்சியையும் பொறுத்து தான், நமக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவை உருவாகக் கூடிய வாய்ப்புகள் உள்ளது என்பதற்கு ஆராய்ச்சி அறிக்கை உள்ளது.
பரோட்டாவேதான் வேண்டும் என்பவர்கள், குறைந்தபட்சம் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைப் பின்பற்ற முயற்சிக்கலாம். அதாவது, செறிவூட்டப்பட்ட மைதா அல்லது புரதச்சத்து நிறைந்த மைதாவை பரோட்டா தயாரிக்கப் பயன்படுத்துங்கள். நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக உள்ள பாமாயில் போன்ற எண்ணெய் இல்லாத, கூட்டுத் தாவர எண்ணெயை (Muti-Sourced Edible Oil) பரோட்டா தயாரிக்கப் பயன்படுத்துங்கள்.
கொழுப்பு அல்லது எண்ணெய் மிதக்கும் சால்னாவிற்கு பதிலாக, காய்கறி குருமா எடுத்துக்கொள்ளலாம். பரோட்டாவிலோ அல்லது குருமாவிலோ வனஸ்பதியைத் தவிர்த்துவிடுங்கள். உணவு என்பது இங்கு தனிமனித சுதந்திரம். ஆனால் அதேவேளையில், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்தின் படி, குடிமக்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தினை மேம்படுத்த, அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த மாதிரியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே, மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்ட ‘சரிவிகித உணவு’ (Balanced Diet) என்ற கோட்பாடு. அந்த சரிவிகித உணவு என்ற வரையறைக்குள் நமக்குப் பிடித்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, எல்லை மீறக்கூடாது என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu