சமையல் எண்ணெய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.. உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனை…

சமையல் எண்ணெய் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை.. உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனை…
X

சமையல் எண்ணெய். (மாதிரி படம்).

சமையல் எண்ணெய் வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஆலோசனை வழங்கி உள்ளார்.

நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளும் ஒருவகையில் காரணம் என்றே கூறலாம். அந்த வகையில், சமையலுக்கு எந்த வகையான எண்ணெய் வாங்கி பயன்படுத்த வேண்டும், அவற்றை எவ்வாறு பாதுகப்பாக வைக்க வேண்டும் என்பது குறித்த புரிதல் இல்லாத நிலை உள்ளது.


சமையலுக்கு பயன்டுத்தும் எண்ணெய் வகைகள் எவை? அவற்றில் பாதுகாப்பானவை எவை? எண்ணெய் வகைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் அளித்துள்ள விளக்கம் இதோ:

மினரல் ஆயில் கலப்படம், எசன்ஸ் கலப்படம் என்று சில பரப்புரைகளில் எளிதில் மயங்கிவிடுகின்றோம். அந்த உணவு எண்ணெய் வகையின் முக்கியத்துவம் குறித்து பார்ப்போம்:

FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட உணவு எண்ணெய்கள்:


கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், . ஆலிவ் ஆயில், சாஃப்ளவர் எண்ணெய் (Safflower Oil), சோள எண்ணெய் (Corn Oil), ரைஸ் பிரான் ஆயில், இலுப்பை எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், தண்ணீர்பழ விதை எண்ணெய் (watermelon seed oil), பேய் எள்ளு எண்ணெய் (Niger seed Oil), ஆளி எண்ணெய் (Linseed Oil), சோயாபீன் எண்ணெய், கசகசா எண்ணெய் (Poppy seed Oil), கார முட்டைக்கோஸ் கீரை விதை எண்ணெய் (Taramira Seed Oil), குங்கிலியம் விதை கொழுப்பு (Sal Seed Fat), மாம்பருப்பு கொழுப்பு (Mango Kernel Fat), முருகல் கொழுப்பு (Kokum Fat), தூப மர விதை கொழுப்பு (Dhupa Fat), Phulwara Fat, Avacoda oil, பாதாம் எண்ணெய் (Almond Oil) ஆகியவை தவிர, வேறு எந்த வகை எண்ணெயையும் உணவு எண்ணெயாகப் பயன்படுத்தக்கூடாது.

இந்த வகை எண்ணெய்களைக் கலவையாக்கி, “Muti-Sourced Edible Oil” என்று விற்பனை செய்யலாம். (கடுகு எண்ணெயுடன் மட்டும் வேறு எண்ணெய் சேர்க்கக்கூடாது.). பாமாயில் தடைசெய்யப்பட்டது அல்ல.

எண்ணெயை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை:


பானை அல்லது டின் மூலம் சில்லறை விற்பனை (loose oil sale) அடிப்படையில், நடமாடும் வியாபாரிகளால் விற்கப்படும் எண்ணெய் வாங்கக்கூடாது. லேபிள் இல்லாமல் பாட்டிலில் அடைத்து, செக்கு எண்ணெய் என்ற பெயரில் விற்கப்படும் எண்ணெயையும் வாங்கக்கூடாது.

FSSAI உரிமம் உள்ளிட்ட முழு லேபிள் விபரங்களுடன், பாட்டிலில் அடைத்து, விற்கப்படும், எந்த உணவு எண்ணெயாக இருந்தாலும், அதனை வாங்கிப் பயன்படுத்தலாம். செக்கு எண்ணெய் பாட்டிலாக அல்லது பொட்டலமாக இருந்தாலும், லேபிள் அவசியம்.

சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், திறந்த நிலையிலும், அடுப்பின் அருகிலும் உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது. சிலிண்டர் போன்று எளிதில் தீ பிடிக்கும் உபகரணங்கள் அருகில் எண்ணெயை வைக்கக்கூடாது. அவசரகதியில் உணவு எண்ணெய் என்று நினைத்து, திரவ வேதிப்பொருட்களை சமையலுக்குப் பயன்படுத்திய நிகழ்வுகள் பதிவாகி உள்ளது என்பதால், வேதிப்பொருட்களின் அருகே, மிகவும் குறிப்பாக, திரவ நிலை வேதிப்பொருட்களின் அருகே உணவு எண்ணெயை இருப்பு வைக்கக்கூடாது என உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!