தாவர வெண்ணெய் பலன்களும், பாதிப்புகளும்.. முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்...

தாவர வெண்ணெய் பலன்களும், பாதிப்புகளும்.. முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்...
X

தாவர வெண்ணெய். (மாதிரி படம்).

நாம் பயன்படுத்தும் தாவர வெண்ணெய் குறித்த பல்வேறு தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வோம்.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெயைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். தாவர வெண்ணெய் கேள்விபட்டு இருக்கிறீர்களா?. ஆம். தாவரம் மற்றும் இதர பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் “தாவர வெண்ணெய்” குறித்து தெரிந்து கொள்வோம். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பனின் விழிப்புணர்வு பதிவு இதோ:

தாவர வெண்ணெய் என்பது, கொட்டைகள் (Nuts) மற்றும் விதைகள் (Seeds) அல்லது அவற்றின் எண்ணெய் மூலம் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகின்றது. பாதாம், முந்திரி, நிலக்கடலை, ஹேசல்நட்ஸ் ஆகியவற்றில் இருந்து, தாவர வெண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. மேலும், பூசணி விதை, எள், சூரியகாந்தி விதை, கொக்கோ விதை ஆகியவற்றில் இருந்தும் தாவர வெண்ணெய் தயாரிக்கப்படுகின்றது.


அதுமட்டுமில்லாமல், அவற்றை ஒன்றுடன் ஒன்று கலந்தும் தாவர வெண்ணெய் தயாரிக்கப்படுகின்றது. தாவரம் தவிர, “தேனீ மகரந்தத்தில் இருந்தும்” வெண்ணெய் (Bee Pollen Butter) தயாரிக்கப்படுகின்றது. தாவர வெண்ணெய் என்பது FSSAI-ஆல் அனுமதிக்கப்பட்ட ஒன்று. பால் மற்றும் பால் பொருட்கள் தவிர, “அவை போன்ற” மற்ற பொருட்களுக்கு (சோயா பால் போன்ற) “பால் மற்றும் பால் பொருட்களுக்குரிய” பெயர்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற FSSAI- இன் விதிக்கு, விலக்கு அளிக்கப்பட்டது தாவர வெண்ணெய்.

“வீகன் வெண்ணெய்” (Vegan Butter) என்று அதன் தயாரிப்பாளர் உரிமை கோரினால், அதற்கான FSSAI அங்கீகரித்த முத்திரை (பச்சை நிறக் கட்டத்தில், பச்சை நிற “V” மற்றும் அதனுள் ஒரு இலை மற்றும் Vegan என்ற வார்த்தை) லேபிளில் அவசியம் இருக்க வேண்டும். தாவர வெண்ணெய் பொட்டலத்தின் லேபிளில் “ஒவ்வாமைப் பொருள்” குறித்து விபரம் ஏதும் தெரிவிக்கப்பட்டுள்ளதா? என்பதை கவனித்து, வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நிலக்கடலை அல்லது சோயாவில் ஒரு சிலருக்குப் பொருந்தாத, ஒவ்வாமைப் பொருள் சில சமயம் இருக்க வாய்ப்பு உள்ளது.


தாவர வெண்ணெய் தயாரிப்பில், சீனி, திரவ குளுக்கோஸ், உணவு எண்ணெய், உப்பு, இயற்கை நிறமிகள் சேர்க்க அனுமதி உள்ளது. ஒரு மேஜைக்கரண்டி தாவர வெண்ணெய்யில் மொத்தக் கொழுப்புச் சத்து 11 சதவீதம் ஆகும். அதில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) 5 கிராம் (தினசரி தேவையில் 27 சதவீதம்), மோனோ-அன்சேச்சுரேடட் கொழுப்பு 5 கிராம், பாலி-அன்சேச்சுரேடட் கொழுப்பு 1.5 கிராம் உள்ளது. எனவே, பால் வெண்ணெய் போலவே, மற்ற கொழுப்பு உணவுகளின் அளவினைப் பொறுத்து, தினம் 1-2 மேஜைக்கரண்டி என்ற அளவே போதும்.

இது தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படுவதால், கூடுதலாக புரதச் சத்து 3 கிராம் (per 15 gm) வரை இருக்கும். வைட்டமின்-பி3, ஃபோலேட், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது.

நிலக்கடலை வெண்ணெய்யில் 25 சதவீததிற்கும் குறையாமல் (25 gm protein per 100 gm) புரதச்சத்து இருக்க வேண்டும் என்று FSSAI வரையறுத்துள்ளது. எனவே, தாவர வெண்ணெய் வாங்கும் போது, லேபிளை நன்கு படித்துப் பார்த்து வாங்கிப் பயன்படுத்தவும். தயாரிப்பாளர் 12 மாதங்கள் வரை தாவர வெண்ணெயை பயன்படுத்தலாம் என்று குறிப்பிட்டு இருந்தாலும், வெண்ணெய் கொள்கலனைத் (Butter Container) திறந்ததில் இருந்து, ஒரு மாதம் வரை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்து, உபயோகிக்கலாம்.


தாவர வெண்ணெய்யின் நிறம், சுவை மாறியுள்ளதாக கணித்தால், அதனை ஒதுக்கிவிடவும். தாவர வெண்ணய்யில் மோனோ-அன்சேச்சுரேடட் கொழுப்பு, பாலிஅன்சேச்சுரேடட் கொழுப்பு ஒப்பீட்டளவில் பால் வெண்ணெயைக் காட்டிலும் சற்று அதிகமுள்ளதால், இதயம் சம்பந்தப்பட்ட நோய் தாக்கத்தினை சற்று குறைக்கின்றது.

மேலும், சக்கரை நோய் கட்டுப்பாட்டடிலும் பங்கு வகிக்கின்றது. ஆனால், நிறைவுற்ற கொழுப்பின் அளவினைக் கருத்தில் கொண்டு, அளவோடு இதனை எடுத்துக்கொள்ளலாம். பல்வேறு வகை தாவர வெண்ணெய் இருந்தாலும், தேனீ மகரந்த வெண்ணெய் மற்றும் நிலக்கடலை வெண்ணெய் சற்று ஊட்டச்சத்து நிறைந்தது. நமது இதய நலனைப் பொறுத்து பால் வெண்ணெயா அல்லது தாவர வெண்ணெயா என்பதை தீர்மானித்து அளவோடு உண்ண வேண்டும் என மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!