அயோடின் கலந்த உப்பை ஏன் பயன்படுத்த வேண்டும்: அதிகாரியின் விளக்கம் இதோ..
உப்பு. (மாதிரி படம்).
"உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழி யாவரும் அறிந்ததே. ஆனால், அந்த உப்பினை அதிகமாக எடுத்துக் கொண்டலோ அல்லது குறைவாக எடுத்துக் கொண்டாலோ உடல் நலத்திற்கு பிரச்னையைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும், தைராயடு ஹார்மோன் குறைபாட்டு நோய்களைக் கட்டுப்படுத்திட உப்பில் அயோடின் என்ற நுண்ணூட்டச் சத்தினை செறிவூட்டி மனித நுகர்வுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கி உள்ளது. அயோடின் எளிதில் காற்றில் கலந்துவிடும் தன்மை உடையது.
எனவே, நுகர்வோர் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:
கடையில் இருந்து உப்பை வாங்கி வந்தவுடன், அந்த உப்பில் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய, உருளைக் கிழங்கை இரண்டாக நறுக்கி, அதன் மாவுப் பகுதியில் சிறிதளவு உப்பைத் தடவி, இரண்டு சொட்டு எழுமிச்சை சாற்றை விட்டு, இரண்டு நிமிடங்கள் வரை காத்திருந்தால், உருளையின் மாவுப் பகுதி ஊதா நிறத்தில் மாறும்.
அவ்வாறு மாறவில்லை எனில், அந்த உப்பில் அயோடின் இல்லை அல்லது மிகக் குறைவாக உள்ளது என்று பொருள். எனவே, அந்த உப்பை வாங்கிய கடையில் திருப்பித் தந்திடவும். அயோடின் டெஸ்ட் கிட்டும் ரூ.50-க்கு கடைகளில் கிடைக்கின்றது.
உப்பை பாக்கெட்டில் இருந்து, ஒரு காற்றுப்புகாத கண்ணாடி அல்லது பீங்கான் அல்லது ப்ளாஸ்டிக் ஜாடியில் மாற்றி, இருக்கமாக மூடி வைக்க வேண்டும். உப்பைத் திறந்து வைத்தால் அயோடின் குறைந்துவிடும் அல்லது இல்லாமலே போய்விடும்.
ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவிற்கு மிகாமல் தான் உப்பை உணவில் சேர்க்க வேண்டும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளவும். Low Sodium Salt என்ற உப்பும், FSSAI-ன் அனுமதிபெற்று, மார்க்கெட்டில் கிடைக்கின்றது. அதனை ரத்தக்கொதிப்பினால் பாதிக்கப்பட்டோர் வாங்கிப் பயன்படுத்தலாம்.
ரத்தசோகையினைத் தடுக்க, தற்பொழுது FSSAI-ஆனது "Double Fortified Salt" என்று, உப்பில் அயோடின் மற்றும் இரும்புச் சத்து ஆகிய இரண்டு நுண்ணூட்டச் சத்துக்களையும் செறிவூறிட்டி விற்பனை செய்ய அனுமதித்து, தற்பொழுது அவை சந்தையில் கிடைக்கின்றது. அதனை நீல நிறத்தில் இருக்கும் "+F" என்ற குறியீட்டினைக் கொண்டு கண்டறியலாம்.
அயோடின் குறித்தான தவறான தகவல்கள் வாட்ஸ்அப்பில் அவ்வொப்போது பரவுகின்றது. நமது ஒரு நாள் அயோடின் தேவை 150 மைக்ரோகிராம் அளவு மட்டுமே ஆகும். அதற்கு ஏற்பவே மார்க்கெட்டில் கிடைக்கும் உப்பில் இருக்க வேண்டிய அயோடின் அளவினை 15 ppm என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஒரு நாளைக்கு 1100 மைக்ரோகிராம் என்ற அளவில் அயோடின் எடுத்துக்கொண்டாலும், அது சிறுநீர் வழியாகச் சென்றுவிடும். அதனால், அயோடின் நுண்ணூட்டச் சத்தினை அதிகமாக எடுத்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான தகவலைப் புறக்கணிப்போம் என மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu