வீட்டில் வெண்ணெய் பாதுகாப்பு: உணவு பாதுகாப்பு அலுவலரின் ஆலோசனை..
வெண்ணெய். (மாதிரி படம்).
வெண்ணெய் என்ற உணவுப் பொருளின் வகைகள், பலன்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து உணவு பாதுகாப்பு துறையின் தூத்துக்குடி மாவட்ட நியமன அலுவலரான மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
வெண்ணெய் என்பது பாலில் இருந்து அல்லது அதன் கிரீமில் இருந்து தயார் செய்யப்படும், கொழுப்பில் தண்ணீர் கலந்த ஒரு உணவுப் பொருள். பாலில் இருந்துப் பெறப்படும் வெண்ணெயை இரண்டு வகையாக பிரிக்கலாம். மேஜை வெண்ணெய் (Table Butter): பதப்படுத்தப்பட்ட பால் அல்லது கிரீமில் உறைமோர் சேர்த்தோ அல்லது சேர்க்கமாலோ தயாரிக்கப்படுவது. இதில் உப்பு சேர்க்கலாம். (Salted Butter என்று லேபிளில் போடப்பட்டு இருக்கும்.)
வெள்ளை வெண்ணெய் (White Butter): பதப்படுத்தப்பட்ட பால் அல்லது கிரீமில் உறைமோர் மற்றும் உப்பு சேர்க்காமல் தயாரிக்கப்படுவது. வெள்ளை வெண்ணெய்யில் 76 சதவீதத்திற்கும் குறையாமலும், டேபிள் பட்டரில் 80 சதவீதத்திற்கும் குறையாமலும் கொழுப்புச்சத்து இருக்க வேண்டும். வெண்ணெய்யில் 16 சதவீதம் தண்ணீர் இருக்கும்.
15 கிராம் வெண்ணெய்யில், மொத்த கொழுப்புச்சத்து 12 கிராம் ஆகும். அதில் நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat) 7 கிராம் (தினசரி தேவையில் 35 சதவீதம்), மோனோ-அன்சேச்சுரேடட் கொழுப்பு 3 கிராம் உள்ளது. எரிசக்தி: 102 Kcal. எனவே, மற்ற கொழுப்பு உணவுகளின் அளவினைப் பொறுத்து, வெண்ணெயை தினம் 1-2 மேஜைக்கரண்டி என்ற அளவில் எடுத்துக்கொள்ளலாம்.
வெண்ணெய்யில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின்-ஏ மற்றும் இ குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. வெண்ணெய்யில் இயற்கை நிறமிகளும், உப்பும் தவிர, வேறு எந்த உணவுச் சேர்மங்களும் (Food Additives) சேர்க்க FSSAI அனுமதிக்கவில்லை.
வெண்ணெய் பாதுகாப்பு:
வெண்ணெயை ஒரு பாட்டிலில் காற்றுப்புகா வண்ணம் இறுக்கமாக மூடி, குளிர்பதனப்பெட்டியில், வைத்து, இரண்டு வாரங்கள் வரைப் பயன்படுத்தலாம். வெண்ணெயை அறைவெப்பநிலையில் வைத்தால், இரண்டு தினங்களுக்குள் உபயோகப்படுத்திடல் வேண்டும். வெண்ணெயை அலுமினியம் ஃபாயிலில் சுருட்டி இருப்பு வைத்தால், வெண்ணெய் சீக்கிரமாகக் கெட்டுவிடும்.
நெய்யைப் போன்றே வெண்ணெயிலும், வனஸ்பதி, தாவர எண்ணெய், உருளைக்கிழங்கு மாவு ஆகியவற்றை கலப்படம் செய்ய வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நெய்யில் ஸ்டார்ச் கலப்படத்தைக் கண்டறியக்கூடிய அயோடின் சோதனையை இதற்கும் பயன்படுத்தி கலப்படத்தை வீட்டிலேயே கண்டறியலாம். ஆனால், மற்ற கலப்படப் பொருட்களைக் கண்டறிய பகுப்பாய்வே சிறந்தது.
வெண்ணெய்யில் உள்ள பீட்டா-கரோட்டீன் நுரையீரல் மற்றும் ப்ராஸ்டேட் கேன்சர் உருவாகும் வாய்ப்பினைக் குறைக்கின்றது. மேலும், எழும்பு வலுவிற்கும், கண் பார்வைக்கும், தோல் நலனிற்கும் வெண்ணெய் உதவுகின்றது. வெண்ணெய்யில் நிறைவுற்ற கொழுப்பு சற்று அதிகமுள்ளதால், தினசரி தேவையைவிடக் கூடுதலாகத் தொடர்ந்து எடுத்துவந்தால் இதய நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, தினசரி கொழுப்பு தேவையின் அடிப்படையில், வெண்ணெயை அளவுடன் எடுத்துக் கொண்டு, வெண்ணெய்யின் நற்பலனை மட்டும் அனுபவிப்போம் என மருத்துவர் மாரியப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu