இந்தியாவில் மரங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த இவர்கள் யார் தெரியுமா?

இந்தியாவில் மரங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த இவர்கள் யார் தெரியுமா?

இயற்கை ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா.

இந்தியாவில் மரங்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த இவர்கள் யார் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியா ஒரு பரந்த நிலப்பரப்பு கொண்ட நாடு. ஒரு காலத்தில் அடர்ந்த காடுகளின் பூமியாக இருந்தது. மாறிவரும் தேவைகளுக்காகவும் அதிகரித்து வரும் மக்கள்தொகைக்காகவும் மனிதன் நிறைய மரங்களை வெட்டவேண்டிய தேவை ஏற்பட்டது. மேலும், மாசு, நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகிய காரணங்களால் காடுகள் மற்றும் மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வருகிறது.

மரங்கள் இல்லாமல் மனித சமூகம் உயிர்வாழ முடியாது. இயற்கைக்கு வைக்கப்பட்ட ஆபத்தான போக்கைத் தடுக்க, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலர் முன்வந்து காடுகளைப் பாதுகாப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளனர். அவர்களில் சிலரின் வாழ்க்கையை இந்த கட்டுரையில் பார்ப்போம்.


சுந்தர்லால் பகுகுணா

சிப்கோ இயக்கத்தின் தலைவரும் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலருமான சுந்தர்லால் பகுகுணா, இமயமலைக் காடுகள் பாதுகாப்பிற்காக அயராது பாடுபட்டவர். வணிக நோக்கம் கொண்ட மரம் வெட்டுதலை எதிர்த்து, கிராமப்புற பெண்களுடன் 'சிப்கோ' இயக்கத்தைத் தொடங்கினார். 'சிப்கோ' என்றால் 'ஒட்டிக்கொள்'' என்று பொருள். மரங்களை வெட்டுவதைத் தடுக்க கிராம மக்கள் மனித சங்கிலியாகக் கைகோர்த்து மரங்களைக் கட்டி அணைத்தல் இந்த இயக்கத்தின் போராட்ட வழிமுறையாக இருந்தது. இவரது முயற்சியால் 1970'களில் உத்தரபிரதேச அரசு வனக் கொள்கையில் மாற்றங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


ஜாதவ் 'மொலை' பயேங்

"அஸ்ஸாமின் வன மனிதர்'' என்று உலகப் புகழ் பெற்றவர் ஜாதவ் பயேங். அஸ்ஸாமின் நடுவே பிரம்மபுத்திரா நதியின் சந்த்பார் தீவில் கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட மிகப்பெரிய காட்டை தனி ஒருவராக உருவாக்கியவர். அசுர வேகத்தில் பாயும் பிரம்மபுத்திரா நதியால் ஆண்டு தோறும் இந்தப் பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது வழக்கம். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு மணல் வெளியாகக் கிடந்த தனது விவசாய நிலத்தைப் பார்த்து மனம் வெதும்பினார் பயேங். சந்த்பார் தீவைப் பசுமையாக்க நினைத்த அவர் அதனைச் செயலிலும் செய்து காட்டினார். அது வளர்ந்து இன்று மொலை காடு என்று அழைக்கப்படுகிறது.


சாலுமரத திம்மக்கா

'சால்' என்பது கன்னடத்தில் வரிசை என்று பொருள். சாலுமரத திம்மக்கா கர்நாடக மாநிலம், பெங்களூரு-துமகூரு தேசிய நெடுஞ்சாலையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு வரிசையாக பல ஆயிரம் ஆலமரங்களை தன் கணவருடன் இணைந்து வளர்த்தெடுத்தவர். குழந்தையின்மைக்காக இவ்வாறு மரங்களை வளர்த்துள்ளார் திம்மக்கா. கிட்டத்தட்ட 80 ஆண்டுகளைக் கடந்த இவ்வம்மையார் பெற்ற விருதுகளும் அங்கீகாரங்களும் ஏராளம்.

இன்னும் பலர் …

இவர்கள் போல் இந்தியாவில் மரம் வளர்ப்புக்காகவும், காடுகளின் பாதுகாப்பிற்காகவும் பாடுபட்டோர் ஏராளம். எழுத்தாளரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான பத்ம பூஷன் விருது பெற்ற சுகுமாரி, தமிழக வனக்காவலராகப் பணியாற்றி தமிழ்நாட்டின் 'மரம் மனிதர்' என அறியப்படும் மாரிமுத்து யோகநாதன் என எண்ணிலடங்கா தலைவர்கள் வனங்களை வளர்த்து வருகின்றனர். எதிர்கால சந்ததிக்கு ஆரோக்கியமான இந்தியாவைத் தருவதற்கு இவர்களைப் போன்றவர்களின் அர்ப்பணிப்பே வழி.

இவர்கள் உலகிற்கு தெரிந்தவர்கள். இன்னும் வெளி உலகிற்கு தெரியாமல் எவ்வளவோ பேர் உள்ளனர்.

முடிவுரை

மரங்கள் நமது உயிர். மனிதனை வாழ வைக்கும் மிகப்பெரிய வளம். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. மரங்களை வெட்டுவதை நிறுத்தி புதிய மரங்களை நடவு செய்வதும் வளர்ப்பதும் நம் அனைவரின் கடமை.

Tags

Next Story