ஏசி அறையில் அதிக நேரம் இருக்கீங்களா? உங்களுக்கான எச்சரிக்கை இதோ..!
கோடை காலம் வந்துவிட்டது; வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. இனி, அலுவலகம், வீடுகளில் ஏசி இல்லாமல் இருக்க முடியாது. ஏசி இல்லாதவர்கள், இந்த மாதம் எப்படியாவது இ.எம்.ஐ.-ஆவது ஏசி வாங்கிவிட வேண்டுமென்று திட்டமிடலாம். இன்றைய காலகட்டத்தில், ஏசி என்ற குளிர்சாதனக்கருவி, மிக அவசியமானதுதான். ஆனால், அதிக நேரம் ஏசியில் இருப்பதால், சில பிரச்சனைகள் எழக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏர்-கண்டிஷனில் அமர்ந்து வேலை செய்வதால், உடலியல் சார்ந்த என்னென்ன பிரச்சனைகள் வரும்?
ஒருசிலர் ஏசியை வாங்கி பொருத்திவிடுவார்கள்; அதன் குளுமையை அனுபவிப்பார்கள். ஆனால், அதனை சர்வீஸ் செய்வதோ, தூய்மைப்படுத்துவதோ கிடையாது. குறைந்தது 3 மாதங்களுக்கு ஒருமுறை, ஏசியில் உள்ள ஃபில்டரில் அழுக்குகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், லிஜினல்லா நிமோபிலியா என்ற பாக்டீரியா வளரும். இது ஏசியில் மட்டுமே வளரக்கூடிய பாக்டீரியா ஆகும். சுவாசப்பாதையில், இவ்வகை பாக்டீரியா பரவினால், நிமோனியாவை உருவாக்கும்.
ஒருசிலர், நல்ல குழுமையான காற்று தேவை என்பதாற்காக, ஏசிக்கு நேராக பார்த்தபடி உட்கார்ந்து பணியாற்றுவார்கள். இது, சைனசுக்கு வழிவகை செய்யக்கூடும். தலைவலி, மூக்கடைப்பு, காது அடைத்தது போல் உணர்வு போன்றவை ஏற்படும்.
ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு, ஏசி காற்று, சில பாதகங்களை உண்டாக்குகிறது. ஏசியில் அமர்ந்த பின்னர், உடலில் அரிப்பு உண்டாகலாம். ஒருசிலருக்கு காதில் கூட அரிப்பு உண்டாகலாம். ஏசியில் நீண்ட நேரம் அமர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுவோருக்கு கண் எரிச்சல் ஏற்படக்கூடும். மூக்கில் சளி ஒழுக வாய்ப்புள்ளது.
எந்நேரமும் ஏசியில் இருப்பதால், உடலுக்கு போதுமான சூரிய ஒளி கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு ஏற்படலாம். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்.
ஏசியின் அருகிலேயே தலை வைத்து படுப்பதால், குளிர்ந்த காற்றானது இரவு முழுவதும் காதுக்குள் சென்று, நரம்புகளை பாதிக்கலாம். இது, 'பெல்ஸ் பேல்சி' (Bell's palsy) என்னும் முக வாதத்தை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஏசியின் மிக அருகில் தூங்குவதை, கூடுமானவரை தவிர்க்கவும்.
ஏசியில் அதிக நேரம் இருப்பதால், தோலில் எண்ணெய் பசை சுரப்பது நின்றுவிடும். வியர்வையும் சரியான முறையில் சுரக்காத நிலையில், சருமம் வறண்டுவிடும். ஏசியில் அளவுக்கதிகமாக இருக்கும் போது, தலைமுடிக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.
அடடா, ஏசி காற்றை அனுபவிக்கவிடாமல், இப்படி பயமுறுத்துகிறீர்களே என்று நினைக்க வேண்டாம். எதையும் அளவாக பயன்படுத்தும் வரை, ஆபத்தில்லை. ஏ.சி.யில் இருந்து வெளிப்படும் செயற்கை காற்று மற்றும் குளிர்ந்த சீதோஷணம் இரண்டுமே உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிப்பவை.
எனவே, தேவைப்படும் தருணங்களில் மட்டும் பயன்படுத்தி, மற்ற நேரங்களில் இயற்கையான காற்றை அனுபவிக்கலாம். வீட்டை சுற்றிலும் மரங்களை வளர்த்து, பசுமையை வளர்ப்போம்; இயற்கையான சூழலில் வாழப் பழகிக் கொள்வோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu