சுவை மிகுந்த கொத்தமல்லி தழை சட்னி செய்வது எப்படி?

Coriander Leaf Chutney Recipe- கொத்தமல்லி தழை சட்னி ( கோப்பு படம்)
Coriander Leaf Chutney Recipe- கொத்தமல்லி தழை சட்னி செய்வது எப்படி என்று தெரிந்துக் கொள்வோம்.
பொதுவாக கொத்தமல்லி தழை என்பது மிகவும் ஆரோக்கியமான ஒரு இலை தழை வகையைச் சார்ந்தது. கொத்தமல்லி தழை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரக்கூடியது. கொத்துமல்லி தழை உணவில் தினசரி சேர்க்கப்படுகிறது. குறிப்பாக சாம்பார், ரசம் மற்றும் காய்கறி வகைகளை சமைக்கும் போது கண்டிப்பாக கருவேப்பிலை, கொத்துமல்லி தழை அதில் கண்டிப்பாக இடம்பெறுகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
கொத்தமல்லி தழை சுவை மிகுந்தது. பச்சையாக சாப்பிடும் ஒரு உணவாகும். குறிப்பாக பச்சை கொத்தமல்லி தழையில் வைட்டமின் ஏ பி சி கே கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சத்துக்கள் மனித உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ இந்த சத்துக்கள் உதவுகிறது.
நிறைந்த மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் கொத்தமல்லி தழையை சட்னியாக செய்து சாப்பிடுவதால் இன்னும் நிறைய ஆரோக்கியம் பெறலாம். சுவையான சட்னி சாப்பிடுவதற்கும் அனைவருக்கும் பிடித்தமானதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
கொத்தமல்லி தழை சட்னி செய்ய தேவையான பொருட்கள்;
கொத்தமல்லி தழை - கால்கட்டு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
வரமிளகாய் - 4
இஞ்சி - 2 துண்டுகள்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையானவை;
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை
முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் வரமிளகாயை காம்புடன் சேர்த்து ஒப்பி வரும் அளவில் வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அதே எண்ணையில் இஞ்சி துண்டுகளை சேர்க்க வேண்டும். நிறம் மாறும் வரை நன்றாக வதக்கி அதையும் மிளகாய் உடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே பாத்திரத்தில் உள்ள எண்ணெயில் கொத்தமல்லியை சேர்த்து லேசாக சுருங்க ஆரம்பிக்கும் வரையில் வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்க வேண்டும். அதை நன்றாக ஆற விட வேண்டும்.
பின்னர் ஒரு மிக்சர் ஜாரில் முதலில் வரமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதனுடன் வதக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் கொத்தமல்லி தழையை சேர்த்து லேசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் கலந்தால் மணமணக்கும் சுவையான, ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி சட்னி தயாராகிவிடும்.
இதை இட்லி, தோசை, சுடுசாதம் எனத் தொட்டு சாப்பிட சுவை அமிர்தமாக இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu