சமையலில் ஏற்படும் சொதப்பல்கள் - ருசியான உணவு பரிமாற இல்லத்தரசிகளுக்கு உதவும் இந்த சூப்பர் டிப்ஸ்!

Cooking tips for housewives- இல்லத்தரசிகளுக்கு உதவும் சமையல் டிப்ஸ்! (கோப்பு படம்)
Cooking tips for housewives- வாய்க்கு ருசியாக சாப்பிடலாம் என்பது அனைவரது ஆசையாகவும் ஆர்வமாகவும் இருக்கிறது. இதில் யாரையும் குறை சொல்ல முடியாது. ஏனென்றால் சாப்பிடும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள நியாயமான ஆசைதான். எதிர்பார்ப்பு தான்.
அதுவும் சமைத்த உணவு சாப்பிட தகுதியற்றதாக இருக்கும் போது, பசி நேரத்தில் ஆர்வமாக சாப்பிட அமருபவர்கள் பலரும் மிக மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டு மன விரக்திக்கு ஆளாகின்றனர் என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில், சமையல் செய்யும்போது இல்லத்தரசிகள் தெரியாமல் செய்யும் சில குளறுபடிகளால் பல சிக்கல்களுக்கு ஆளாகின்றனர். அந்த மாதிரி ஆகும் நேரங்களில், இது போன்ற விஷயங்களை கவனித்து சரி செய்து கொண்டால் அந்த சமையல் சூப்பராக மாறிவிடும் அது குறித்து சில டிப்ஸ்களை இப்போது பார்ப்போம்.
கிரேவி;
வீடுகளில் சிக்கன், மட்டன் கிரேவி செய்யும்போது சில நேரங்களில் கிரேவியில் உப்பு அதிகமாகிவிடும். அந்த மாதிரி நேரங்களில் தேங்காய் அல்லது முந்திரி பருப்பு சிறிது, ஒரு மிளகாய் சேர்த்து அரைத்து அந்த கிரேவியில் போட்டு விட்டால், அது கொதித்தால் உப்பின் அளவு சரியாகிவிடும்.
ரசம்;
சமைக்கும் போது, ரசத்தில் புளிப்பு கூடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. பெண்கள் ரசம் வைக்கும் போது ரசத்தில் புளிப்பு அதிகமாகி விட்டால் சாப்பிட முடியாமல், சிரமப்படுவார்கள். அந்த நேரங்களில் நான்கு பூண்டு பற்கள், மிளகு ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் சீரகம், சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸியில் அரைத்து அரை கப் நீர் கலந்து ரசத்தில் விட்டால் ரசம் சரியாகி புளிப்பு தன்மை போய்விடும்.
வெஜிடபிள் பிரியாணி;
வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது உப்பு அல்லது காரம் அதிகரித்துவிட்டால் இரண்டு வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் போட்டு வறுத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறும் கலந்து விட்டு அதை பிரியாணிக்குள் சேர்த்து விட்டால் உப்பு, காரம் குறைவதுடன் சுவையும் அதிகரிக்கும்.
இட்லி தோசை மாவு;
இட்லி, தோசை மாவில் உப்பு அதிகமாகிவிட்டால் அதைப்பற்றி கவலைப்பட தேவை இல்லை. ஒரு கரண்டி ரவையை வறுத்து, ஒரு கப் பாலும், தண்ணீரும் கலந்து ஐந்து நிமிடம் ஊற விட்டு பின்பு அதை இட்லி மாவில் கலந்து விட்டால் உப்பு சரியான அளவுக்கு வந்துவிடும்.
பொரியல்;
பொரியல் செய்யும்போது அதில் உப்பு அதிகமாகி விட்டால் தேங்காயை துருவி சேர்த்து அத்துடன் அரை ஸ்பூன் சர்க்கரையும் கலந்து விட வேண்டும்.
வத்தக்குழம்பு, காரக்குழம்பு;
வத்தக்குழம்பு அல்லது காரக்குழம்பு சமைக்கும் போது காரம் அதிகமானால், இரண்டு தக்காளியை வதக்கி அரைத்து, அந்த குழம்பில் சேர்த்து விட்டு கொதிக்க வைத்தால் போதும்.
கலவை சாதம்;
கலவை சாதம் செய்யும்போது உப்பு அல்லது காரம் அதிகம் என தோன்றினால், அப்பளத்தை தூளாக்கி சேர்த்து கலந்து, சிறிது எலுமிச்சம் சாறும் அதில் கலந்து விட்டால் சுவையாக இருக்கும்.
சப்பாத்தி மற்றும் பூரி;
சப்பாத்தி மற்றும் பூரிக்கு மிகவும் சுவையான சைட் டிஷ் உருளைக்கிழங்கு மசாலா. இதின் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிட்டால், அதிகம் புளிப்பு இல்லாத கெட்டித்தயிரை கடைந்து அதில் சேர்க்கலாம் அல்லது தேங்காய் பால் சேர்த்தாலும் உப்பு அல்லது காரம் குறைந்து விடும்.
சாம்பார்;
சாம்பாரில் உப்பு அதிகமாகி விட்டால், வேக வைத்த துவரம் பருப்பை அரைத்து அதில் சேர்த்து விட்டால் போதும். வெந்த பருப்பு கைவசம் இல்லாத போது, தனியாக ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, அரை ஸ்பூன் மிளகு, சீரகம் அரை ஸ்பூன், தேங்காய் துருவல் இரண்டு ஸ்பூன் எடுத்து வறுத்து, அரைத்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க விட்டால் மிகவும் ருசியாக இருக்கும், உப்பு மாயமாகி விடும்.
சாம்பார் பொடி;
சாம்பார் பொடி அரைக்கும்போது சில சமயம் வெந்தயம் அதிகம் சேர்த்து அரைத்து விட்டால், சாம்பார் வைக்கும் போது. கசப்பு சுவை அதிகமாக தெரியும். அந்த நேரங்களில் ஒரு ஸ்பூன் வெல்லம் அதில் சேர்த்து, அதை கொதித்து வைத்து இறக்கினால் கசப்புத்தன்மை தெரியாது.
இவ்வாறு இந்த டிப்ஸ்களை இல்லத்தரசிகள் பின்பற்றினால் சமையலிலல் ஏற்படும் இது போன்ற பல சொதப்பல்களை உடனே சரி செய்து விட முடியும். குறிப்பாக உப்பு, புளி, காரம் விஷயங்களை சரிசெய்து விட்டாலே சமையல் அதிக ருசியாக மாறிவிடும். இல்லத்தரசிகளுக்கும் சமையல் ராணி என்ற பட்டம் குடும்பத்தில் எளிதாக கிடைத்துவிடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu