தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நேரங்கள் என்ன தெரியுமா?

தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நேரங்கள் என்ன தெரியுமா?
X

பைல் படம்

தண்ணீர் குடிப்பதற்கு ஏற்ற நேரங்கள் என்ன தெரியுமா? விரிவாக தெரிந்துகொள்வோம்.

உடலில் 60% நீர் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆக்சிஜனைத் தவிர, நீர் தான் உயிர்வாழ மிகவும் அவசியமானது. நம்முடைய நாளின் செயல்பாடுகள் உணவைச் செரித்தல், உடல் வெப்பநிலையை சீராக்குதல், கழிவுகளை அகற்றுதல், என அத்தனையிலும் நீரின் பங்கு அளப்பரியது. போதுமான அளவு நீர் அருந்தாவிட்டால், உடல் வறட்சி (dehydration) நிலையை சந்திக்கக்கூடும்.

எவ்வளவு நீர் அருந்த வேண்டும் என்பது பலரும் கேட்கும் கேள்வி. வழக்கமாக, ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது நல்லது என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் உண்மையில், உங்கள் தேவைக்கேற்ப அளவு மாறுபடும். ஆண்களுக்கும், பெண்களுக்குமான தேவையும் வேறுபடும். உங்கள் உடல் எடை, உடலுழைப்பு, வசிக்கும் பகுதியின் தட்பவெப்பம் போன்ற பல்வேறு காரணிகள், உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை நிர்ணயிக்கின்றன.

ஆனால், தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமா? அதையும் தாண்டி, நாளில் சில குறிப்பிட்ட நேரங்களில் நீர் அருந்துவது கூடுதல் நன்மைகளை அளிக்கும். அவை என்னென்ன என்று பார்ப்போம்.


1. விழித்தவுடன்

இரவு முழுவதும் தூங்கும்போது நம் உடல் நீர் இழப்பை சந்திக்கிறது. அதனால் காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அருந்துவது வளர்சிதை மாற்றத்தை (metabolism) தூண்டும். இது அன்றைய நாளுக்கு நம் உடலைத் தயார் செய்யும் செயல்.

2. உணவு உண்ணும் முன்

உணவு உண்ணும் அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் நீர் அருந்துவது செரிமானத்துக்கு உதவுகிறது. மேலும், அது நம் பசியைக் குறைத்து, அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும் உதவும்.

3. உடற்பயிற்சிக்குப் பின்

உடற்பயிற்சியின்போது நாம் வியர்வை மூலம் நீரை இழக்கிறோம். உடனுக்குடன் அந்த நீர் இழப்பை ஈடு செய்வது மிக அவசியம். இல்லையெனில் மயக்கம், குமட்டல் போன்ற உபாதைகள் கூட வரலாம். ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சி செய்பவர்கள் electrolyte அடங்கிய நீராகாரம் அருந்தினால் அது வியர்வையில் வெளியேறிய உப்புகளையும் சேர்த்து ஈடு செய்கிறது.

4. உடல்நிலை சரியில்லாத போது

காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில், நம் உடல் வழக்கத்தைவிட அதிகமாக நீரை இழக்கிறது. எனவே, இந்த நேரங்களில் எப்போதும் தண்ணீர் பாட்டிலை கைவசம் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிது சிறிதாக நீர் அருந்த வேண்டும்.

5. பசி எடுக்கும்போது

சில நேரங்களில், தாகத்திற்கும் பசிக்கும் உள்ள வித்தியாசத்தை நம்மால் உணர முடிவதில்லை. பசி எடுக்கிறது என்று நினைத்து ஏதாவது சாப்பிடப் போவதற்கு முன்பு, ஒரு டம்ளர் நீர் அருந்துங்கள். பசி அடங்கினால் உண்மையிலேயே உங்களுக்கு தாகம் தான் எடுத்திருக்கிறது என்று அர்த்தம்.


6. குளியலுக்கு முன்

குளியலுக்கு முன் ஒரு டம்ளர் நீர் அருந்துவது ரத்த அழுத்தத்தை சற்றுக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

7. தூங்கும் முன்

தூங்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீர் அருந்துவது நல்லது. தூங்கப் போவதற்கு நேர் எதிராக குடித்தால், இரவில் அடிக்கடி எழுந்து சிறுநீர் கழிக்க நேரிடலாம். அது தூக்கத்தைக் கெடுக்கும்.

தண்ணீர் குடிக்க சில டிப்ஸ்

போதுமான அளவு நீர் அருந்துகிறோமா என்பதை கண்காணிக்க, நம் சிறுநீரின் நிறமே ஒரு நல்ல அறிகுறி. வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் உடல் நல்ல நீரேற்றத்துடன் உள்ளது என்று அர்த்தம்.

சுவைக்காக சிறிதளவு எலுமிச்சை சாறு, புதினா இலைகள் போன்றவற்றை தண்ணீரில் சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறைவாக இருந்தால், மொபைலில் நினைவூட்டல் செயலியைப் (reminder app) பயன்படுத்தி கொள்ளுங்கள்.

நம் உடல் ஆரோக்கியத்தின் ஆணிவேர் இந்த நீர் தான். இனிமேல் ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிக்கும்போதும் இந்தக் கட்டுரையை நினைவு கூர்ந்து, அந்த அற்புத பானத்தை ருசித்து மகிழுங்கள்!

Tags

Next Story