மசூர் பருப்பு உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 10 காரணங்கள்
உணவே மருந்து என்று சொல்வார்கள். அந்த வகையில், நமது அன்றாட சமையலில் இடம்பெறும் பருப்பு வகைகள் பல்வேறு சத்துக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. அவற்றுள் ஒன்றுதான் மசூர் பருப்பு. சிகப்பு நிறத்தில் சிறியதாக இருக்கும் இந்தப் பருப்பில் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன. என்னென்ன நன்மைகள் என்பதை இங்கே காணலாம்.
உடலுக்கு வலு சேர்க்கும் மசூர் பருப்பு
புரதச்சத்தின் களஞ்சியம்: புரதம் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். அசைவ உணவுகளுக்கு இணையான புரதச்சத்து மசூர் பருப்பில் உள்ளது. நம் உடல் திசுக்கள், செல்கள் போன்றவற்றின் உருவாக்கத்திலும், பழுதடைந்த செல்களைச் சீர்படுத்துவதிலும் புரதச்சத்து மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த சர்க்கரையை சீராக்குகிறது: மசூர் பருப்பில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இந்த நார்ச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென ஏறுவதைத் தடுக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்கும் உணவில் மசூர் பருப்பை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும்.
இதயத்திற்கு இதம்: நார்ச்சத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மசூர் பருப்பில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதால், இது இதய ஆரோக்கியத்திற்குப் பெரிதும் உதவுகிறது. மேலும், இதிலுள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, இதயத் துடிப்பை சீராக்கவும் உதவும்.
எலும்புகளுக்கு வலிமை: வைட்டமின் K, கால்சியம் போன்ற எலும்புகளுக்கு வலிமை அளிக்கும் சத்துக்கள் மசூர் பருப்பில் உள்ளன. ஆஸ்டியோபோரோசிஸ் எனும் எலும்பு அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கவும் மசூர் பருப்பு உதவும்.
சீரான செரிமானம்: இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்து மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்றவற்றைத் தடுக்கிறது. செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மசூர் பருப்பு சிறந்த பங்காற்றுகிறது.
கொழுப்பைக் குறைக்கிறது: மசூர் பருப்பில் கொழுப்பு மிகக்குறைவு. மேலும் இதிலுள்ள நார்ச்சத்து உடலின் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது. எனவே எடையைக் குறைப்பவர்களும், உடல் எடையைச் சீராக பராமரிப்பவர்களும் மசூர் பருப்பை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆற்றலை அதிகரிக்கும்: இரும்புச்சத்து நம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உருவாக மிகவும் உதவுகிறது. அந்த ரத்த சிவப்பணுக்கள்தான் உடல் முழுவதும் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. மசூர் பருப்பில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இயங்கவும், சோர்வு அண்டாமல் இருக்கவும் இது உதவுகிறது.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு போலிக் அமிலம் (Folate) மிகவும் அவசியம். குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை சீராக உருவாக்குவதில் போலிக் அமிலம் முக்கியப் பங்காற்றுகிறது. மசூர் பருப்பில் இயற்கையாகவே போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிகள் தங்கள் உணவில் மசூர் பருப்பைச் சேர்த்துக் கொள்வது பலன் தரும்.
நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்தும் : மசூர் பருப்பில் ஜிங்க் (zinc) மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளன. இந்தச் சத்துக்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
சுவையான சமையல்
இத்தனை சத்துக்கள் நிறைந்த மசூர் பருப்பை தினசரி உணவில் எப்படிச் சேர்த்துக் கொள்வது என்று யோசிக்கிறீர்களா? மசூர் பருப்பு சூப், மசூர் பருப்பு குழம்பு, கூட்டு, அடை, தோசை என பல்வேறு விதங்களில் சேர்த்துக் கொள்ளலாம். இது எளிதில் வேகக்கூடியது என்பதால், அவசரத்திற்கும் ஏற்றது.
அதிக அளவு மசூர் பருப்பு சிலருக்கு வாயுத்தொல்லை, வயிற்று உப்புசம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, அளவோடு சாப்பிடுவது நல்லது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu