என்சிஎஸ் இணையதளத்தில் காலிப்பணியிட தகவல்கள் பெருமளவில் அதிகரிப்பு

என்சிஎஸ் இணையதளத்தில் காலிப்பணியிட தகவல்கள் பெருமளவில் அதிகரிப்பு
X
என்சிஎஸ் இணைய தளம் மூலம் காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளது.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015- ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிவைத்தார். தகுதி வாய்ந்த வேலை தேடக்கூடியவர்களை, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியவர்களுடன் இணைத்து உதவும் வகையில், தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்தவும், இந்த இணையதளம் உதவுகிறது.

செப்டம்பர் 26ம் தேதியின் படி, தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள காலி பணியிடங்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, 4,82,264 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 3,20,917 என்ற அதிகளவாக இருந்தது. தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் தொடங்கப்பட்டதிலிருந்து 1.09 கோடிக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 26 வரை, தெரிவு செய்யப்பட்ட வேலை தேடுவோரின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் உதயம் இணையதளத்தில் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை பதிவு செய்கின்றனர். தேசிய வேலைவாய்ப்பு சேவை மற்றும் உதயம் இணையதளம் இணைப்பு மூலம் இதுவரை 39,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனத்தினர் தேசிய வேலைவாய்ப்பு இணைய தளத்தில் பதிவு செய்துள்ளனர். இ-ஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்துள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள் 9.72 லட்சம் பேர் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.

வேலைவாய்ப்பு எண்ணிக்கை 4வது காலாண்டில் 3.18 கோடியாக அதிகரிப்பு

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக காலாண்டு வேலைவாய்ப்பின் நான்காவது சுற்று பற்றிய ஆய்வறிக்கையை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் புபேந்தர் யாதவ் வெளியிட்டார்.

விவசாயம் சாராத துறைகளில் உள்ள மொத்த வேலைவாய்ப்பில் பெரும் பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பு குறித்த தகவல்களைக் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவகம் மற்றும் தங்குமிடங்கள், தகவல் தொழில்நுட்பம்/பிபிஓ மற்றும் நிதி சேவைகள் ஆகியவை இந்த ஒன்பது துறைகள் ஆகும்.

நிறுவனம் சார்ந்த வேலைவாய்ப்பு குறித்த அகில இந்திய காலாண்டு ஆய்வு, இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது- முதலாவதாக, "காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு", இரண்டாவதாக, "பகுதி திட்ட அமைப்பு ஆய்வு". காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு என்பது 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ள நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதும், இரண்டாவது ஆய்வு, 9 அல்லது அதற்கும் குறைவான பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் பற்றியதுமாகும்.

பொருளாதாரத்தின் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் அது சம்பந்தமான முக்கிய தகவல்களை திரட்டுவதற்காக அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு காலண்டிலும் சுமார் 12000 அமைப்புகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவ்வாறு, முதன்முதலில் 2021ம் ஆண்டு ஏப்ரல்- ஜூன் காலத்திற்கான அறிக்கை, அதே ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு நிலவரம் அதிகரித்து வருவதாக நான்காவது காலாண்டு அறிக்கையை வெளியிடுகையில், மத்திய அமைச்சர் தெரிவித்தார். மூன்றாம் காலாண்டில் (செப்டம்பர்-டிசம்பர் 2021) 3.14 கோடியாக இருந்த மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு, நான்காவது காலாண்டில் (ஜனவரி- மார்ச், 2022) 3.18 கோடியாக உயர்ந்தது. ஆறாவது பொருளாதாரக் கணக்கெடுப்பில் (2013-2014) இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் மொத்த வேலைவாய்ப்பின் அளவு 2.37 கோடியாக பதிவானது என்பது குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கை என்பது, விநியோகம் மற்றும் தேவை குறித்த ஆய்வாகும். அதாவது குறிப்பிட்ட கால அளவிற்கான தொழிலாளர் ஆய்வு என்பதால் நாட்டில் வேலைவாய்ப்பு குறித்த தரவு இடைவெளிகளை இது குறைக்கும்.

நான்காவது காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

• மூன்றாவது காலாண்டில் 3.14 கோடி பணியாளர்கள் பணியாற்றியதுடன் ஒப்பிடுகையில், நான்காவது காலாண்டில் 5.31 லட்சம் நிறுவனங்களில் மொத்தம் 3.18 கோடி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Figure 1- இலக்கம் 1

Overall Employment – ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு

Employment – வேலைவாய்ப்பு

(In crores)- கோடியில்

QES Quarters- காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வுறிக்கை காலாண்டுகள்

• பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் உற்பத்தித் துறை முதலிடமும் (38.5%), அதைத்தொடர்ந்து 21.7% உடன் கல்வித்துறையும், 12% உடன் தகவல் தொழில்நுட்பம்/ பி.பி.ஓ துறையும், 10.6% உடன் சுகாதாரத் துறையும் உள்ளன.

• நிறுவனங்களின் அளவைப் பொருத்தவரையில் (பணியாளர்களின் எண்ணிக்கை) 80% நிறுவனங்களில் 10 முதல் 99 தொழிலாளர் வரை பணிபுரிந்தனர். 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்கள் எனக் கொண்டால், இந்த இலக்கம் 88%ஆக உயர்கிறது. 12% நிறுவனங்களில் 10-க்கும் குறைவான தொழிலாளர்கள் பணியாற்றினர்.

• 1.4% நிறுவனங்களில் மட்டுமே குறைந்தபட்சம் 500 பேர் பணியாற்றினார்கள். இது போன்ற மிகப்பெரிய அமைப்புகள் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பம்/ பி.பி.ஓ மற்றும் சுகாதாரத் துறையில் இயங்குகின்றன.

• மூன்றாவது காலாண்டில் 31.6%ஆக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, நான்காவது காலாண்டு அறிக்கையில் 31.8%ஆக, சற்று உயர்ந்தது. இருப்பினும், சுகாதாரத் துறையில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை 52%ஆக இருந்தது. அதைத்தொடர்ந்து கல்வி, நிதி சேவை மற்றும் தகவல் தொழில்நுட்பம்/பி.பி.ஓ துறைகளில் முறையே 44%, 41% மற்றும் 36%ஆக பதிவானது. சுய தொழில் புரியும் ஆண்களை விட நிதி சேவை துறையில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விஷயம்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!