வரும் 2ம் தேதி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னையில் வரும் 2ம் தேதி விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுநர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் திறன் தேர்வுகள் எதிர்வரும் 02.03.2023 அன்று காலை 7.00 மணி முதல் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தடகளம், வில்வித்தை, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, ஜுடோ, கபாடி, கோ-கோ, நீச்சல், டென்னிஸ், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், மல்யுத்தம் மற்றும் வூசு ஆகிய விளையாட்டுக்களுக்கான 87 நிரந்தர பயிற்றுநர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடந்த டிசம்பர் 2022 மாதத்தில் நாளிதழ்களிலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலும் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அதனடிப்படையில், 530-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக பெறப்பட்டுள்ளது. அவற்றில் முதல் நிலையாக அனைத்து இனங்களிலும் தகுதி பெற்ற 225 விண்ணப்பதாரர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வுகள் கடந்த 29.01.2023 அன்று நடைபெற்றது. முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 189 விண்ணப்பதாரர்களுக்கு மூன்றாம் நிலை தேர்வாக 02.03.2023 அன்று நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கான அழைப்புக் கடிதம் தபால் மூலமும், அவரவர் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட விண்ணப்பதாரர்கள் 02.03.2023 அன்று காலை 7.00 மணிக்குள் சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி திறன் தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். மேற்படி தேர்வுகளில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு யாதொரு மறு வாய்ப்பும் வழங்கப்பட இயலாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu