குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா
நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக உள்ள உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம், வருகிற ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 9ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற ஜூலை 19ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மாநிலங்களவை செயலாளர் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டது. 776 எம்பிக்கள், 4033 எம்.எல்.ஏக்கள் என 4809 மக்கள் பிரதிநிகள் சேர்ந்து வாக்களித்து குடியரசு தலைவரை தேர்வு செய்வார்கள்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், பரூக் அப்துல்லா மற்றும் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் மூவறும் மறுத்துவிட்டனர்.
அடுத்த கட்டமாக இன்று, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அமைச்சரவையில் நிதி அமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். பின்னர் 2018 ல் பா.ஜ.க.வில் இருந்து வெளியேறி 2021ல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து அவர் அக்கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் அவர் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
இது ககுறித்து சின்ஹா தனது ட்விட்டரில், மம்தாஜி எனக்கு அளித்த மரியாதை மற்றும் கௌரவத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்போது ஒரு பெரிய தேசிய நோக்கத்திற்காக, நான் கட்சியில் இருந்து ஒதுங்கி அதிக எதிர்க்கட்சி ஒற்றுமைக்காக பணியாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிப்பார் என்று நான் நம்புகிறேன், "என்று ட்வீட் செய்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27ம் தேதி காலை 11.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு (என்சி) தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுவதற்கான வாய்ப்பை நிராகரித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu