வார்த்தைகள் எதையும் தடை செய்யவில்லை: சபாநாயகர் ஓம் பிர்லா
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து தகாத வார்த்தைகள் என நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டது. இதனைக்கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேற்கு வங்கத்தின் திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரேக் ஓ ப்ரீன், முடிந்தால் தன்னை இடைநீக்கம் செய்யட்டும் என சவால் விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் பேசும்போது தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளின் பட்டியல் புத்தகமாக வெளியிடப்படுவது வழக்கம். காகிதம் வீணாவதை தவிர்க்க இம்முறை அவை இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. ஒருவேளை உறுப்பினர்கள் பேசினால், அது அவை குறிப்பிலிருந்து அகற்ற மட்டுமே உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.
மேலும் எந்த வார்த்தையும் புதிதாக இணைக்கப்படவில்லை. ஏற்கனவே அகற்றப்பட்ட வார்த்தைகள் அப்படியே தொகுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகளின் தொகுப்பு 1954ம் ஆண்டு முதல் புத்தகமாக வெளியிடப்பட்டதாக ஓம் பிர்லா தெரிவித்தார்.
தற்போது தொகுக்கப்பட்டுள்ள 1,100 பக்கங்கள் கொண்ட அகராதியை முழுவதும் படித்திருந்தால், யாரும் தவறான கருத்துக்களை வெளியிட்டிருக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu