கோவாவிற்கு பதில் அயோத்திக்கு ஹனிமூன். அடுத்து நடந்தது தான் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள போபால் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில், கணவர் தன்னுடைய மனைவியிடம் ஹனிமூனுக்கு கோவா அழைத்து செல்கிறேன் என உறுதி கூறி விட்டு, அதற்கு பதிலாக அயோத்தியா மற்றும் வாரணாசி நகரங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இந்நிலையில், சுற்றுலா சென்று விட்டு அந்த தம்பதி ஊர் திரும்பிய 10 நாட்களில் மனைவி விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தம்பதிக்கு திருமணம் நடந்து 5 மாதங்களே ஆன நிலையில், இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதுபற்றிய அந்த விவாகரத்து மனுவில், கணவர் ஐ.டி. பிரிவில் வேலை செய்கிறார். நல்ல சம்பளம் வாங்குகிறார். அந்த பெண்ணும் வேலைக்கு சென்று கைநிறைய சம்பளம் வாங்குகிறார். இதனால், ஹனிமூனுக்கு வெளிநாடு செல்வது ஒன்றும் அவர்களுக்கு பெரிய விஷயமில்லை.
நிதி நெருக்கடி எதுவும் இல்லாதபோது, அந்த பெண்ணின் கணவரோ வெளிநாட்டுக்கு ஹனிமூன் அழைத்து செல்ல மறுத்திருக்கிறார். இந்தியாவிலேயே ஓரிடத்திற்கு செல்லலாம் என கணவர் கூறியிருக்கிறார். பெற்றோரை கவனிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதன்பின் ஹனிமூனுக்கு, கோவாவுக்கோ அல்லது தென்னிந்தியாவுக்கோ செல்லலாம் என்று அந்த தம்பதி முடிவுக்கு வந்தது. ஆனால், கணவரோ அயோத்திக்கும், வாரணாசிக்கும் செல்லும் விமானங்களில் முன்பதிவு செய்திருக்கிறார். மனைவியிடம் அதுபற்றி எதுவும் கூறவில்லை. ஹனிமூனுக்கு புறப்படும் ஒரு நாளுக்கு முன் பயண திட்ட மாற்றங்களை பற்றி மனைவியிடம் தெரிவித்து இருக்கிறார்.
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் அயோத்தி நகரை சுற்றி பார்க்க வேண்டும் என கணவரின் தாயார் விரும்பியிருக்கிறார். அதனை மனைவியிடம் கணவர் எடுத்து கூறியிருக்கிறார்.
அப்போது, அந்த பெண் எதுவும் கூறவில்லை. வாக்குவாதமும் செய்யவில்லை. திட்டமிட்டபடி அவர்கள் அந்த இடங்களுக்கு சென்றுள்ளனர். புனித தலங்களுக்கு சென்று விட்டு திரும்பியதும், கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி, போபால் குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், தன்னை விட அவருடைய குடும்ப உறுப்பினர்கள் மீது கணவர் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்து உள்ளார். ஆனால், மனைவி வீணான ஆர்ப்பாட்டம் செய்கிறார் என்று கணவர் கூறுகிறார். அவர்கள் இருவருக்கும் போபால் குடும்ப நீதிமன்றத்தில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu