குஜராத் தேசிய விளையாட்டு போட்டியில் முதலிடம் பிடிக்குமா தமிழகம்?

ஒலிம்பிக், உலக விளையாட்டுப் போட்டிகள், ஆசிய போட்டி, சர்வதேச தடகளப் போட்டி இவற்றுக்கு நிகராக இந்திய அளவில் நடத்தப்படும் போட்டிகளில் ஒன்று தான் தேசிய விளையாட்டு போட்டி. இந்த போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பிடிப்பதற்கு கடும் போட்டி நடப்பது உண்டு.
இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு போட்டிகள் 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், இந்திய ராணுவ வீரர்கள் அணியான சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.
இந்தப் போட்டியில் காயம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் என்ற பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, ஒலிம்பிக் மற்றும் உலகப் போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோர் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் ஷானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா, நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தடகள வீராங்கனைகள் டுடூட்டி சந்து, ஹிமாதாஸ், அன்னுராணி உள்ளிட்ட முன்னணி விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.
இந்த நிலையில் இரு நாள் பயணமாக குஜராத் வந்துள்ள பிரதமர் மோடி ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியினை இன்று தொடங்கி வைத்தார். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற துவக்க விழாவில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திரா பட்டேல் உள்ளிட்ட மாநில அமைச்சகம், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களை தவிர தொடக்க விழாவில் ஒலிம்பிக் வீராங்கனைகள் பிவி சிந்து, நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் சர்வீசஸ் அணி 91 தங்கம் உள்பட 159 பதக்கங்கள் குவித்து முதல் இடத்தை பிடித்தது. நமது அண்டை மாநிலமான கேரளா 54 தங்கம் உள்பட 162 பதக்கங்களுடன் இரண்டாவது இடமும், அரியானா 40 தங்கம் உட்பட 107 பதக்கங்களுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர். தமிழக அணி 16 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களுடன் எட்டாவது இடத்தை தான் பெற்றது.
இந்த சூழலில் தான் தற்போது 36 வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத் மாநிலத்தில் தொடங்கி இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரர்கள் எத்தனை பேர் செல்கிறார்கள்? என்னென்ன விளையாட்டுகளில் பங்கேற்க இருக்கிறார்கள் என்ற தமிழக அரசின் வெளிப்படையான அறிவிப்பு இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.
கடந்த ஜூலை மாதம் தமிழகத்தின் மாமல்லபுரம் நகரில் 'செஸ் ஒலிம்பியாட்' என்ற பெயரில் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாத கணக்கில் தமிழக அரசு ஏராளமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது. தலைநகர் சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தின் குக்கிராமம் வரை செஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறிப்பாக மாரத்தான் ஓட்டம், கோலப்போட்டி போன்றவை நடத்தப்படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டது. இந்த விளம்பர நிகழ்ச்சிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டிருந்தது.
முதலமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் ஆகிய எல்லோருமே தங்களது அன்றாட வேலைகளை விட்டு விட்டு செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதிலேயே தான் குறியாக இருந்தனர். ஆனால் நமது இந்திய நாட்டிற்குள் நடக்கும் தேசிய அளவிலான இந்த விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் பங்களிப்பு என்ன என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் காட்டிய ஆர்வத்தில் ஒரு சதவீதத்தையாவது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக அரசு காட்டி இருக்கலாம் .
தேசிய அளவில் இப்படி ஒரு விளையாட்டு இருக்கு இருக்கிறது என்பதே நமது தமிழகத்தின் சாதாரண கிராம மக்களுக்கு தெரியாது ஏன் நகரவாசிகள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி இருந்தால் எத்தனையோ கிராமத்து இளைஞர்கள் மாணவர்கள் இதில் பங்கேற்க முடியும். ஆதலால் தமிழக அரசு இதுபோன்ற விளையாட்டுக்களுக்கும் முக்கியத்துவம் அளித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இந்த போட்டியில் தமிழக வீரர் வீராங்கனைகள் சாதனை படைப்பார்களா முதலிடத்தை பிடிப்பார்களா என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu