குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? இஸ்ரோ தலைவர்
பிரதமர் மோடி இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடி சென்ற அவர், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அப்போது வ.உ.சி துறைமுகத்தில் ரூபாய் 7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ. 265.15 கோடி மதிப்பிலான வடக்கு சரக்கு தளம் 3 எந்திரம் மயமாக்கல், ரூபாய் 124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவு தளத்திற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ஏற்கனவே இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதளம் உள்ளது. இங்கிருந்துதான் விண்வெளி ஆய்வு தொடர்பான அனைத்து ராக்கெட்டுகளும் ஏவப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் இரண்டாவது ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இதனை கொண்டாடும் வகையில் குலசேகரப்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, ரோகிணி ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு மையம் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சிறிய ரக ரோகிணி ராக்கெட் 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்குள் விழும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறிய ரக ராக்கெட் ஏவப்பட்டதை முன்னிட்டு மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரையிலான கடற்பகுதி ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இன்று குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.
இந்தநிலையில், திருச்செந்தூரிலிருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான நிலத்தை தமிழ்நாடு அரசு இஸ்ரோவிடம் ஒப்படைத்துவிட்டது. 2 ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும். இந்தியாவின் 2-வது ராக்கெட் ஏவுதளமாக குலசேகரப்பட்டினம் உள்ளது. குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணிற்கு செலுத்துவது மிகச் சுலபம். ரூ.1,000 கோடி மதிப்பிலான பணிகள் விரைவில் முடியும் என நம்புகிறேன்.
ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகில் இருப்பது அவசியம். அத்துடன் கடற்கரை பகுதியாகவும் இருக்கவேண்டும். இந்த இரு அம்சங்களும் அமையப்பெற்ற இடம் குலசேகரபட்டினம். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரபட்டினம் பூமத்திய ரேகைக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. ஸ்ரீஹரிகோட்டா பூமத்திய ரேகைக்கு வடக்கே சுமார் 13 டிகிரி தொலைவிலும், குலசேகரபட்டினம் சுமார் 8 டிகிரி தொலைவிலும் உள்ளது. இதனால் குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டை செலுத்துவதற்கான செலவு குறைவு ஆகும். எரிபொருளும் குறைவாகவே செலவாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஒவ்வொரு தடவையும் ராக்கெட்டை விண்ணுக்கு ஏவும் போதும் தெற்கு நோக்கி செலுத்த வேண்டி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவுக்கு தென் திசையில் இலங்கை இருப்பதால், ராக்கெட்டை சிறிது தூரம் தென்கிழக்கு திசையில் மேல் நோக்கி செலுத்தி, பின்னர் தெற்கு திசைக்கு திருப்பி செலுத்த வேண்டி உள்ளது.
சர்வதேச அளவில் ஒரு நாடு தனது ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தும் போது மற்ற நாட்டின் மீது பறக்க விடக்கூடாது என்ற விதி உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படும்போது அதன் பாகங்கள் இலங்கை மீது விழுந்து விடாதபடி கவனமாக செலுத்தப்பட வேண்டும். .
அதுமட்டுமின்றி ராக்கெட்டை அதிகப்படியாக திசை திருப்பி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பறக்க விடப்படும் ராக்கெட்டுகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக செலவு அதிகமாகிறது.
குலசேகரபட்டினத்தில் இருந்து ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தினால் மிக விரைவில் அது தெற்கு திசை சென்று விடும். அதை திசை திருப்ப வேண்டிய வேலையும் இல்லை.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தின் மூலம் நேரம், பொருளாதாரம் போன்றவை சேமிப்பாகிறது. ஆண்டுக்கு 24 சிறிய ராக்கெட்டுகளை ஏவும் வகையில் தளம் அமைக்கப்படும். ஸ்ரீஹரிகோட்டாவை விட குலசேகரப்பட்டினத்திலிருந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு 10-ல் ஒரு பங்கு செலவே ஆகிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu