ராமர் கோவில் விழா: பங்கேற்காமல் எங்கே சென்றார்கள் முக்கிய தலைவர்கள்?

ராமர் கோவில் விழா: பங்கேற்காமல் எங்கே சென்றார்கள் முக்கிய தலைவர்கள்?
X
ராமர் கோவில் விழாவில் பாஜக முக்கிய தலைவர்களும் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சிலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், ஸ்ரீபால ராமர் எழுந்தருளியிருக்கிறார். மஞ்சள், சிவப்பு நிறப் பட்டாடையில் கையில் தங்கத்தாலான வில், அம்புடன் காட்சியளிக்கிறார்.

சிறப்பான அலங்காரத்துடன் வண்ண வண்ண மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, தங்க நகைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி பிராண பிரதிஷ்டை விழா சடங்குகள் தொடங்கி நடைபெற்றன. அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி அகற்றப்பட்டு, கண் திறந்துவைக்கப்பட்டது. அயோத்தி ராமருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் காட்டப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, ஸ்ரீபாலராமர் சிலையை பிராண பிரதிஷ்டை செய்யும் பூஜையை தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், முக்கிய தலைவர்களும் மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.

குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்றைய பிராண பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்கவில்லை. மேலும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியும் இந்த நிகழ்வியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் இன்று அரைநாள் விடுமுறை அறிவித்து ஆச்சரியம் அளிக்கப்பட்டது. ஆனால், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நிகழ்வியில், முக்கிய தலைவர்களும் முக்கிய மத்திய அமைச்சர்களுமே பங்கேற்காமல் இருந்துவிட்டது ஏன் என்ற கேள்விகளும் ஆச்சரியங்களும் எழுந்துவிட்டன. அதனை தவிர்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதிலுமிருந்து சுமார் 7 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் அழைக்கப்பட்டு, விழாவுக்கு வந்திருந்த நிலையில், அத்வானியும், அமித் ஷாவும் பங்கேற்காதது ஏன்?

இந்த முக்கிய நிகழ்வு நடந்து கொண்டிருக்கும் போது அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று பார்த்தால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிர்லா கோயிலில் தனது குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்கு நேரலையாக ஸ்ரீபால ராமர் கோயில் பிரதிஷ்டையை பார்த்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வானிலை மற்றும் கடுங்குளிர் போன்றவற்றால், எல்கே அத்வானி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் தவிர்க்க காரணமாக அமைந்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோரும் பங்கேற்கவில்லை.

இதுபோல, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது இல்லத்தில், ராமர் பூஜை செய்து, இந்த நாளை சிறப்பானதாக்கிக் கொண்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் வழிபாடு நடத்தினார்.

ராமர் கோயில் அமைப்பில் முக்கிய நபராகப் பங்கேற்று, இன்று ராமர் கோயில் உருவாக முக்கிய காரணமாக இருந்த அத்வானி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும், நேரலையாக ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நிகழ்வை கண்டிருப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்