முஸ்லிம் பெண்களுக்கும் உரிமை வழங்கும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

முஸ்லிம் பெண்களுக்கும் உரிமை வழங்கும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா
X

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜூ.

முஸ்லிம் பெண்களுக்கும் உரிமை வழங்கும் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கலாம்.

நாடாளுமன்றத்தில் 44 திருத்தங்களுடன் வக்பு வாரிய சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் போகும் நிலை ஏற்பட்டதால் கூட்டுக் குழுவின் ஆய்விற்காக இந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவில் அப்படி என்னதான் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இதற்கு ஏன் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் என்பது பற்றி இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம்.

அதாவது பல்லாண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மன்னர்களும், முஸ்லிம் செல்வந்தர்களும் இறைவனுக்கு சொத்துக்களை தானமாக வழங்கினார்கள். இந்த சொத்துகள் தான் வக்பு சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சொத்துக்களை முறைப்படுத்த கடந்த 1954 ஆம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய கவுன்சிலும், மாநிலங்களில் வக்பு வாரியங்களும் அமைக்கப்பட்டன ரயில்வே, ராணுவம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வக்பு வாரியங்களுக்கு தான் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சொத்துக்களின் மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருவாய் மசூதி பராமரிப்பு, முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு ஆகியவற்றுக்கு செலவிடப்படுகிறது. பழைய சட்டத்துக்கு பதிலாக 1995 ஆம் ஆண்டு புதிய வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே வக்புவாரிய சொத்துக்கள் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்காக 1995ஆம் ஆண்டு சட்டத்தில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இந்த திருத்தங்களுக்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. 1995ஆம் ஆண்டு சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்து வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியது. அதன் நகல்கள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு எம்பிகளுக்கு அனுப்பப்பட்டது.

வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

ஒரு சொத்து வக்பு சொத்தா என்பதை முடிவு செய்ய வக்பு வாரியத்துக்கு அதிகாரம் அளிக்கும் 1995ஆம் ஆண்டு வக்பு சட்டத்தின் பத்தாவது பிரிவு நீக்கப்படுகிறது.

மத்திய கவுன்சிலும், வக்பு வாரியங்களும் விரிவுபடுத்தப்படுகின்றன. அவற்றில் தலா இரண்டு முஸ்லிம் பெண்களும், தலா இரண்டு முஸ்லிம் அல்லாதவர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

போரா முஸ்லிம்கள் அகாகானிஸ் ஆகிய சமூகத்தினருக்காக தனியாக ஒரு சொத்து வாரியம் அமைக்கப்படும். அதில் சன்னி, ஷியா ,போரா, அகாகானிஸ் மற்றும் இதர பின்தங்கிய முஸ்லிம் சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் .

வக்பு என்ற சொல்லுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இஸ்லாம் மதத்தை குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பின்பற்றியவராகவும் வக்பு சொத்து உரிமையாளராகவும் இருப்பவர்கள் வக்பு என்று அழைக்கப்படுவார்கள்.

ஒரு சொத்து வக்பு சொத்தா இல்லையா என்பதை அந்தந்த மாவட்ட கலெக்டரே தீர்மானிக்கலாம் .வக்பு சட்ட சர்ச்சைகளை தீர்ப்பதற்கு மத்திய சட்டத்தில் மாவட்ட கலெக்டர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதான் வக்பு வாரிய திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய சரத்துக்கள் ஆகும்.

இந்த சட்ட திருத்த மசோதாவை வழக்கம் போல காங்கிரஸ் தலைமைகளான எதிர்கட்சிகள் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க தொடங்கி விட்டார்கள். பாரதிய ஜனதாவிற்கு எதிரான மனநிலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கடுமையாக குரல் கொடுத்து உள்ளார்.

அதே சமயத்தில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வக்பு சட்ட திருத்தத்திற்கு ஆதரவாளித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த சட்டத்தின் மூலம் முஸ்லிம் பெண்களுக்கு சமூக நீதி கிடைக்கும் என வரவேற்று உள்ளார்.

மொத்தத்தில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தில் உள்ள நன்மை தீமைகள் சாதக பாதகங்களை முழுமையாக ஆராய்ந்து பார்த்துவிட்டு தான் இது பற்றி பதில் சொல்ல வேண்டும். சில இஸ்லாமிய அமைப்புகள் கூட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை வரவேற்று உள்ளனர். ஆதலால் இதை அரசியல் ரீதியாக பார்க்காமல் ஒரு பொது கண்ணோட்டத்தோடு பார்ப்பதே சரியான தீர்வு இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!