திருப்பதியில் 9 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து
திருப்பதி கோவில்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கட்ரமணா ரெட்டி, மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி ஆய்வு நடத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மா ரெட்டி, ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் மத்தியில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. எனவே அதிக அளவு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கக்கூடிய பிரம்மோற்சவம் அக்டோபர் 5ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவம் தொடங்கக்கூடிய 27ஆம் தேதி ஆந்திர மாநில அரசின் சார்பில் முதல்வர் ஜெகன்மோகன் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவை 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. . எனவே பிரம்மோற்சவம் நடைபெறக்கூடிய 27ஆம் தேதி முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரை ரூ 300 விரைவு தரிசனம், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களும் ரத்து செய்யப்படுகிறது.
இலவச தரிசனத்தில் மட்டும் ஏழுமலையானை தரிசனம் செய்ய இந்த 9 நாட்கள் அனுமதிக்கப்படும். சுவாமி விதி உலாவை காண அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள். தினந்தோறும் காலை 8:00 மணிக்கும் இரவு 7 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறும்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாள் நடைபெறக்கூடிய பெரிய சேஷ வாகனம் மட்டும் இரவு 9 மணிக்கு தொடங்கப்படும். பிரம்மோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் லட்டு பிரசாதம் வழங்க, லட்டு உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருமலை முழுவதும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதற்காக ஐந்தாயிரம் தூய்மை பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். மருத்துவ உதவிகளுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, திருப்பதி அரசு மருத்துவமனை மற்றும் சிவிம்ஸ் மருத்துவமனையில் இருந்து முகாம்களுக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சேவை அளிக்க உள்ளனர்.
திருமலை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆங்காங்கே கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து திருமலை முழுவதும் சி சி டிவி கேமரா கண்காணிப்பில் இருக்கும். பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக 3500 ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.
பக்தர்களை கவரும் விதமாக மின் அலங்காரம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பேருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் இயக்க வேண்டும் என போக்குவரத்து துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu