நாடு முன்னேற மகளிருக்கு அதிகாரமளித்தலை விரைவு படுத்த வேண்டும் - குடியரசு துணைத்தலைவர்
பல்வேறு பிரிவுகளிலும் நாடு முன்னேற்றம் அடைய பெண்களுக்கு கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக அதிகாரமளித்தலை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என குடியரசு துணைத்தலைவர் எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
ஃபிக்கி மகளிர் அமைப்பின் 38-வது வருடாந்திர மாநாட்டில் நேற்று பேசிய அவர், பல்வேறு துறைகளிலும், பாலினப் பாகுபாட்டை அகற்ற வேண்டியது அவசரத் தேவை என்றார். "பெண்களுக்கு அதிகாரம் அளிக்க அரசுத்துறைகள் முதல் தனியார் துறைகள் மற்றும் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரும், ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டியதன் தேவையையும் நாயுடு சுட்டிக்காட்டினார். மகளிருக்கு அதிகாரமளிப்பது, அவர்களது சொந்த வாழ்க்கையில் பன்மடங்கு விளைவுகளை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, அவர்களது குடும்பம் மற்றும் சமுதாயத்தில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். உள்ளார்ந்த வளர்ச்சிக்கு, பெண்கள், குழந்தைகள் மற்றும் இந்தியாவின் கிராமப்புறங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பாலின சமத்துவத்தை உறுதி செய்வதோடு, பெண்களிடையே எழுத்தறிவு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த குடியரசு துணைத்தலைவர் இந்த விவகாரத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பெண்களின் முன்னேற்றத்திற்கு பொருளாதார அதிகாரமளித்தல் மிக முக்கியம் என்று குறிப்பிட்ட அவர், பாலினப் பாகுபாடின்றி அனைத்து குழந்தைகளுக்கும் சொத்தில் சமஉரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பெண்களுக்கு கல்வி புகட்டுவதில் அரசின் முயற்சிகளுக்கு தொழில்துறையினரும், தொண்டு நிறுவனங்களும் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' என்பது போன்ற திட்டங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தப்படுவதாகக் கூறினார். "சிறுமிகளுக்கு எதிராக எவ்வித பாகுபாடும் காட்டக்கூடாது என்பதோடு பெண் குழந்தைகளை பள்ளிக் கூடத்திற்கு அனுப்ப வேண்டும்" என்றும் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu