துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகை

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு புதுச்சேரி வருகை
X

குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு

ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழக விழாக்களில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று புதுச்சேரி வருகிறார்

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு 3 நாள் பயணமாக புதுச்சேரி வருகிறார். சென்னையில் இருந்து இன்று காலை 9 மணிக்கு புறப்படும் அவர், 9.50 மணிக்கு புதுச்சேரி விமான நிலையம் வந்து சேருகிறார். அவரை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்லும் துணை ஜனாதிபதி, அங்கு ரூ.7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மின்சக்தி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுத்து, மாலை 5 மணி அளவில் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று பார்வையிடுகிறார்.

நாளை (திங்கட்கிழமை) காலையில் காலாப்பட்டில் உள்ள புதுவை என்ஜினீயரிங் கல்லூரியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தொடங்கி வைக்கிறார். புதுவை பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியமின்சக்தி திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.

துணை ஜனாதிபதியின் வருகையையொட்டி புதுவை போலீசார் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன் மேற்பார்வையில் துணை ஜனாதிபதியை விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருவது, ஜிப்மருக்கு செல்வது, காலாப்பட்டு, அரவிந்தர் ஆசிரமம் சென்று வந்து ஒத்திகை நடந்தது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Tags

Next Story