இந்திய மொழிகளுக்கிடையில் இலக்கிய படைப்புகளை மொழி பெயர்க்க குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
தெலுங்கு பல்கலைக்கழக நிறுவன தின விழாவில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு
பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள பழமையான இலக்கிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உறுதியான, தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடு கேட்டுக் கொண்டுள்ளார். செழுமையான பாரம்பரியம் மிக்க, இந்திய இலக்கியங்களை மக்களுக்கு அவர்களது சொந்த தாய் மொழியில் கொண்டு சேர்க்க மொழிபெயர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறு அவர் யோசனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, ஶ்ரீ கிருஷ்ண தேவராயர் எழுதிய ஆமுக்தமால்யதா' போன்ற பழமையான இலக்கியங்களை இதர இந்திய மொழிகளில் மொழி பெயர்த்துள்ள பொட்டி ஶ்ரீராமுலு தெலுங்கு பல்கலைக்கழகத்தின் முயற்சிகளை திரு நாயுடு பாராட்டினார். இதுபோன்ற முயற்சிகளில் மற்ற பல்கலைக்கழகங்களும் ஈடுபட்டு, அந்த இலக்கியங்களைப் பாதுகாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
தெலுங்கு பல்கலைக்கழக நிறுவன தின விழாவில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், தெலுங்கு மொழி, இலக்கியம் மற்றும் வரலாற்றை பல்வேறு ஆராய்ச்சி முன்முயற்சிகள் வாயிலாக பாதுகாக்கும் பல்கலைக்கழகத்தின் அர்ப்பணிப்பை பாராட்டினார். பல்கலைக்கழகத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி. ராமராவுக்கு அவர் மரியாதை செலுத்தினார். தெலுங்கு மொழி, கலாச்சாரத்தை பரப்பும் வகையில் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த தெலுங்கானா மாநில அரசும், முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவும் எடுத்து வரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
உலகமயமாக்கலால் ஏற்படும் தாக்கத்தால், இளைஞர்கள் தங்கள் கலாச்சார பாரம்பரியத்துடனான தொடர்பை இழந்து விடக்கூடாது என்று குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தினார். ஒருவரது அடையாளத்தை உருவாக்குதிலும், இளைஞர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டுவதிலும் மொழியின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட திரு நாயுடு, மக்கள் தங்களது சொந்த தாய்மொழியில் பேசுவதில் பெருமையடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தேசிய கல்வி கொள்கை 2020, இந்திய மொழிகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்ட நாயுடு, தொடக்க கல்வி குழந்தையின் தாய் மொழியில்தான் இருக்க வேண்டும் என்று அது ஊக்குவிப்பதாக தெரிவித்தார். உயர் கல்வி வரை தாய் மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் தேவையான ஆராய்ச்சிகளை பல்கலைக்கழகங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், கவிஞரும், விமர்சகருமான டாக்டர் குரெல்லா விட்டாலாச்சார்யா, குச்சுப்புடி நடனக்கலைஞர் கலாகிருஷ்ணா ஆகியோருக்கு விருதுகளை அவர் வழங்கினார்.
பின்னர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்த ' ஒரே பாரதம் உன்னத பாரதம்' புகைப்பட கண்காட்சியை நாயுடு தொடங்கி வைத்தார். தெலுங்கானா உள்துறை அமைச்சர் முகமது மக்மூத் அலி, தெலுங்கானா மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பி.வினோத் குமார், தெலுங்கு பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கேட கிருஷன் ராவ் உள்ளிட்டோர், மற்றும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu