ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் குடியரசுத் துணைத் தலைவர் வழிபாடு
இந்திய மக்கள் மற்றும் ஒட்டுமொத்த உலகத்தின் அமைதி, வளம் மற்றும் நல்வாழ்வுக்காக வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு வழிபாடு மேற்கொண்டார்.
நேற்று மாலை தனது மனைவி உஷா நாயுடுவுடன் புனித நகரமான வாரணாசி வந்தடைந்த நாயுடு, புதிதாக கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாத் தாம் வழித்தடத்தையும் பார்வையிட்டு, அதிகாரிகளிடம் திட்டம் குறித்து கேட்டறிந்தார்.
கோவில் வளாகத்தில் உள்ள பாரத மாதாவின் உருவச்சிலைக்கு நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முகநூல் பதிவிட்ட அவர், 'நமது சனாதன பாரம்பரியம், நமது நம்பிக்கை மற்றும் ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான நமது எதிர்ப்பின் புகழ்வாழ்ந்த சின்னம்' என்று காசி விஸ்வநாதரை வர்ணித்தார். பின்னர், பிரசித்தி பெற்ற கால பைரவர் கோவிலில் பூஜை மற்றும் ஆரத்தியை குடியரசுத் துணைத் தலைவர் மேற்கொண்டார். சிவபெருமானின் உக்கிரமான வடிவத்தைக் குறிக்கும் ஸ்ரீ கால பைரவர், 'காசியின் கோட்வால்' என்றும் நகரின் பாதுகாவலர் என்றும் அழைக்கப்படுகிறார்.
படாவில் அமைந்துள்ள பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நினைவு மண்டபத்திற்கு சென்ற குடியரசுத் துணைத் தலைவர், பண்டிதரின் வாழ்க்கைப் பயணத்தை சித்தரிக்கும் முப்பரிமாண விர்ச்சுவல் ரியாலிட்டி காட்சியை பாராட்டினார்.
அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் குடியரசுத் துணைத் தலைவர் பின்வருமாறு எழுதினார்.
"இந்தியாவின் முதன்மையான கலாச்சார மற்றும் அரசியல் சின்னங்களில் ஒருவருக்கு மரியாதை செலுத்துவதற்காக பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் நினைவு மண்டபத்திற்கு சென்றேன். தீன்தயாள் ஒரு ஆழ்ந்த தத்துவஞானி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் தனிநபர் ஒழுக்கத்தின் மிக உயர்ந்த தரத்தை பராமரிக்கும் தலைவர். அவரது வாழ்க்கை மற்றும் தத்துவம் தேசத்திற்கு வழிகாட்டுதலாகவும் உத்வேகமாகவும் உள்ளது. தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்துவதும், மிகவும் பின்தங்கிய பிரிவினருக்கு மகிழ்ச்சியைத் தருவதும்தான் பண்டிதருக்கு நாம் செலுத்தும் சிறந்த அஞ்சலியாக இருக்கும். பாரதத்தை மகிழ்ச்சியான மற்றும் வளமான நாடாக மாற்ற நாம் அனைவரும் இந்த இலக்கை நோக்கி பாடுபடுவோம்."
புனிதமான தசாஸ்வமேத் காட்டில் புகழ்பெற்ற கங்கா ஆரத்தியில் குடியரசுத் துணைத் தலைவர் தமது மனைவியுடன் நேற்று பங்கேற்றார். அவர் அதை ஒரு நம்பவியலாத மற்றும் தெய்வீக அனுபவம் என்று விவரித்தார். அவரது இதயத்தில் அது என்றென்றும் நிலைத்திருக்கும் என்றார் நாயுடு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu