இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வீர மங்கை வேலு நாச்சியார் பெயர்

இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வீர மங்கை வேலு நாச்சியார் பெயர்
இந்திய கடலோர காவல் படை கப்பலுக்கு வீர மங்கை வேலு நாச்சியார் பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விடுதலை போராட்ட வீராங்கனை வேலு நாச்சியாரின் பெயரை இந்திய கடலோர காவல்படைக்கு சூட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட மாநிலங்களில் ஜான்சிராணி லட்சுமிபாய் இந்திய விடுதலை போராட்டத்தின் முகமாக முன்னிறுத்தப்படுகிறார். ஆனால், அவருக்கு சுமார் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு முன்னதாகவே ஆங்கிலேயர்களை விரட்டியடித்த பெருமை வேலுநாச்சியாருக்கு உண்டு. இந்நிலையில், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயரை சூட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பது அனைத்து தரப்பினரிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

கடலோர காவல் படைக்கு வீர மங்கைகளின் பெயர்கள் தொடர்ந்து சூட்டப்பட்டு வருகிறது. அதாவது சென்னையில் இந்திய கடலோர காவல்படை திட்டக்குழு, கடலோர காவல்படை தலைமையகத்திற்கு வேலுநாச்சியார் பெயரை சூட்டுவது குறித்த குறிப்பை அனுப்பியிருந்தது. இதனையடுத்து பெயர் சூட்டுவதற்கான செயல்முறைகள் தொடங்கியுள்ளன.

வேலுநாச்சியார் என்கிற பெயர் பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அவரை பற்றி குறைவான தகவல்களே அறியப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போது, ஆண் வாரிசு இல்லாத ராஜ்ஜியத்தை அவர்களே எடுத்துக்கொள்வார்கள். அதாவது, ஆண்கள் மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள தகுதியுடையவர்கள் என்பதே இதன் பொருள். ஆனால், இதற்கான முதல் எதிர்ப்பு தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்பியது. ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதிக்கு மகளாக பிறந்தவர்தான் வேலுநாச்சியார். பிறந்தது பெண்ணாக இருந்தாலும், வேலுநாச்சியாரை ஆணுக்கு இணையாக மன்னர் வளர்த்தார்.

சிலம்பம் தொடங்கி, களரி வரை எல்லா பயிற்சிகளும் பெற்று வெடிக்க தயாராக இருக்கும் அணு குண்டை போன்று எல்லாவற்றிற்கும் வேலுநாச்சியார் தயாராகவே இருந்தார். இப்படி இருக்கும்போதுதான் அந்த துயர சம்பவம் நடந்தது. அதாவது இவரது கணவர் மற்றும் மகள் கௌரி நாச்சியாரையும் ஆங்கிலேயர்கள் கொன்று, சிவகங்கை சீமையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். கணவன், மகள் போனது பத்தாது என சொந்த நிலத்தையும் கையிலிருந்து பிடுங்கிய ஆங்கிலேயர்களை பழி தீர்க்க சரியான சந்தர்ப்பத்தை வேலுநாச்சியார் எதிர்பார்த்து காத்திருந்தார். அதுவரை அவருக்கு தேவையான உதவிகளை பல்வேறு அரசர்கள் செய்து கொடுத்தனர். அதில் ஹைதர் அலி முக்கியமானவர். திண்டுக்கல் மலைக்கோட்டையில் வேலு நாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்து அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த பெருமை ஹைதரையே சேரும்.

தலைமறைவு காலத்தில் வெறுமெனே வாழ்க்கையை நகர்த்தாமல், தன்னுடைய எதிரியை பழி தீர்க்க அனைத்து திட்டங்களையும் தீட்டி வைத்திருந்தார் வேலுநாச்சியார். இறுதியில் எதிர்பார்த்த சந்தர்ப்பமும் வந்தது. சின்ன மருது, பெரிய மருது துணையுடன் தனது ராஜ்ஜியத்தை வீழ்த்திய ஆங்கிலேயர்களை வீழ்த்தி அரியணை ஏறினார். ஆட்சி செலுத்தவும், ஆங்கிலேயர்களை விரட்டி அடிக்கவும் ஆண்களால் மட்டுமல்ல, பெண்களாலும் முடியும் என்பதை வேலுநாச்சியாரின் செயல் நெற்றி பொட்டில் அறைந்தார் போல சொன்னது. இத்தனை மதிப்பு மிக்கவேலு நாச்சியாரின் பெயர், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பலுக்கு சூட்டப்படுவது தமிழ் சமூகத்திற்கான அங்கீகாரமாக கருதப்படுகிறது.

Tags

Next Story