இந்திய கடலோர காவல் படையில் வஜ்ரா ரோந்து கப்பல் இணைப்பு

இந்திய கடலோர காவல் படையில் வஜ்ரா ரோந்து கப்பல் இணைப்பு
X

இந்திய கடலோர காவல் படையில், 'வஜ்ரா' என்ற ரோந்து கப்பலை, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் சென்னையில் இன்று இணைத்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் இந்திய கடலோர காவல் படை தலைமை இயக்குனர் கிருஷ்ணசாமி நடராஜன், காவல்படை கிழக்கு மண்டல கமாண்டர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எஸ்.பரமேஸ், எல் அண்ட் டி நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜே.டி.பாட்டீல் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எல் அண்ட் டி நிறுவனம் தயாரித்து வழங்கிய 6வது ரோந்து கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது.ஐசிஜிஎஸ் வஜ்ரா ரோந்துக் கப்பல், 98 மீட்டர் நீளம் கொண்டது. இதை சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்தது.

இதில் நவீன நேவிகேஷன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்கள், சென்சார் கருவிகள் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பலில் 30 எம்.எம் மற்றும் 12.7 எம்.எம் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. எல்எல்எச் எம்.கே.3 ரக இரட்டை என்ஜின் ஹெலிகாப்டர், 4 விரைவு படகுகள் ஆகியவற்றை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடலில் எண்ணெய் கசிவு போன்ற மாசுவை அகற்றும் நவீன சாதனங்களும் இந்தக்கப்பலில் பொருத்தப் பட்டுள்ளன. கடலோர காவல் படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்குரிய அனைத்து நவீன சாதனங்களும் இந்த ரோந்து கப்பலில் உள்ளன. வஜ்ரா ரோந்து கப்பல் இந்த கடலோர பகுதியை காக்கும் பணியில் ஈடுபடும். டிஐஜி அலெக்ஸ் தாமஸ் தலைமையில் இயங்கும், இந்த ரோந்து கப்பல் தூத்துக்குடியில் இருந்து செயல்படும்.

கடலோர காவல் படையின் கிழக்கு படைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள இந்த கப்பல், கண்காணிப்பு பணியில் ஈடுபடும். இத்துடன் சேர்த்து கடலோர காவல் படையில் உள்ள கப்பல்கள் மற்றும் அதிவிரைவு படகுகளின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்