உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் சுட்டுக்கொலை

உ.பி. முன்னாள் எம்பி ஆதிக் அகமது மகன் சுட்டுக்கொலை
X

பைல் படம்.

வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் பிரபல ரவுடி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் அகமது இன்று மதியம் உத்தரப் பிரதேச அதிரடிப்படை போலீஸாரால் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச போலீஸ் கூறுகையில், “வழக்கறிஞர் உமேஷ் பால் கொலைக்குப் பின்னர் லக்னோ, கான்பூர், மீரட், டெல்லி என ஆசாத் அகமது இடம் பெயர்ந்து கொண்டே இருந்தார். ஆதிக் அகமது கும்பலில் இருந்த இன்ஃபார்மர் ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆசாத் மத்தியப் பிரதேசம் செல்லத் திட்டமிட்டது தெரியவந்தது. எங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் கைது நடவடிக்கையை திட்டமிட்டோம்.

இதற்காக இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 12 போலீஸார் ஆசாத் அகமது மற்றும் குலாமை கைது செய்ய விரைந்தனர். ஜான்சி அருகே ஆசாத் அகமதுவையும், குலாமையும் அதிரடிப் படை சுற்றிவளைத்தது அப்போது குலாம் அதிரடிப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதனையடுத்து நடந்த பதில் தாக்குதலில் ஆசாத் அகமதுவும், குலாமும் கொல்லப்பட்டனர். மொத்தம் 42 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொலையான இருவரிடமும் இருந்து செல்ஃபோன், சிம் கார்டுகள், வால்டர் P 88 ரக பிஸ்டல்கள் இன்னும் சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story