அக்னிபத் திட்டம் அமல்படுத்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தீவிர ஆலோசனை

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
முப்படை ராணுவத்திலும் அக்னி வீரர் என்னும் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மிகுந்த முனைப்பு காட்டி வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பின், இவர்களில் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பீஹார் மற்றும் உ.பி., மாநிலங்களில் ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து அக்னிபத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் அக்னி வீரர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு பின்னும் பல்வேறு துறைகளில் வேலை வழங்குவது பற்றி மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன. துணை ராணுவம் மற்றும் அசாம் துப்பாக்கிப்படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. கர்நாடக மாநிலத்தில் அந்த மாநில காவல்துறையில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு பணி வாய்ப்பு தரப்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையில் அக்னிபத் திட்டம் பற்றி முப்படைகளின் தலைமை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் இன்றும் 2 ம் நாளாக தீவிர ஆலோசனை நடத்தினார். இதில் கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் பங்கேற்றனர். ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில், துணை ராணுவ தளபதி ராஜு பங்கேற்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu