மீன்வளத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள்: மத்திய அமைச்சர் எல். முருகன்

மீன்வளத்துறையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக மத்திய இணையமைச்சர் டாக்டர். எல். முருகன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சிம்லாவில் இன்று தொடங்கிவைத்த ஏழைகள் நல மாநாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டாக்டர் முருகன், வளர்ச்சித் திட்டங்களில் ஒன்றாக நாட்டின் முதலாவது கடல்பாசி பூங்கா தமிழகத்தில் உருவாக்கப்பட உள்ளது என்றார். சென்னை காசிமேடு உட்பட நாடு முழுவதும் ஐந்து மீன்பிடி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிரின் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டுள்ள மத்திய அரசு விலையில்லா எரிவாயு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் இதன் மூலம் நாடு முழுவதும் எட்டு கோடி குடும்பங்கள் பயனடைந்திருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், தமிழகத்தில் மட்டும் 32 லட்சம் குடும்பங்கள் விலையில்லா சமையல் எரிவாயு இணைப்பை பெற்றிருப்பதாக கூறினார்.
குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார். பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் பேரும் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ் 46 லட்சம் பேரும் தமிழகத்தில் மட்டும் பயனடைந்து இருப்பதாக அமைச்சர் கூறினார்.
தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் இலவசமாக கட்டித்தரப்பட்டதாகவும் தமிழகத்தில் ஒரு கோடியே 27 லட்சம் குடியிருப்புகளுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நடைபாதை வியாபாரிகளுக்கான கடனுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 4 லட்சம் பேர் பயனடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும் கடந்த எட்டு ஆண்டுகளில் திரு மோடி தலைமையிலான அரசின் எண்ணற்ற சாதனைகளை மத்திய அமைச்சர் முருகன் இந்த நிகழ்ச்சியில் பட்டியலிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu