வெளிநாட்டவரின் விசா காலத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்தது

வெளிநாட்டவரின் விசா காலத்தை மத்திய உள்துறை அமைச்சகம்  நீட்டித்தது
X
இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும்

கோவிட்-19 காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2020 மார்ச்சுக்கு முன்னர் பல்வேறு வகைகளிலான விசாக்கள் மூலம் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டவர் பலர், கோவிட் -19 பெருந்தொற்று நிலைமையின் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் இந்தியாவிலேயே தங்கி இருக்கின்றனர்.

அத்தகைய வெளிநாட்டவர்கள் இந்தியாவில் தங்குவதற்காக அவர்களின் வழக்கமான விசா அல்லது இ-விசா அல்லது தங்கும் காலத்தை எந்தவித அபராதமும் இல்லாமல் மத்திய அரசு நீட்டித்து வருகிறது.

2021 ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்ட இந்த வசதி, தற்போது 2021 செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வெளிநாட்டவர்கள் விசா நீட்டிப்பிற்காக 2021 செப்டம்பர் 30 வரை எந்தவித விண்ணப்பமும் சமர்ப்பிக்கத் தேவியில்லை. நாட்டை விட்டு வெளியேறும் முன், அதற்கான அனுமதியை ஆன்லைன் மூலம் அவர்கள் கோரலாம். எந்தவித அபராதமும் இல்லாமல் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

ஒரு வேளை 2021 செப்டம்பர் 30-க்கு பிறகும் தங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் விசா நீட்டிப்புக்காக ஆன்லைன் மூலம் அவர்கள் விண்ணப்பிக்கலாம். வழிகாட்டுதல்களின் படி அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

இந்தியாவில் இருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டினருக்கு தனியாக உள்ள வழிகாட்டுதல்களின் படி விசா நீட்டிப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story