ரயில் விபத்தில் உயிரிழப்பு 288 ஆக உயர்வு: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த பிரதமர்
விபத்து குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஹவுராவிற்கு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹவுரா- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுராவில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.
அந்த ரயில் நேற்று இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் என்ற இடம் அருகே வந்தபோது அந்த ரயிலின் மீது ஒரு சரக்கு ரயில் மோதியது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. திடீரென ஏற்பட்ட இந்த விபத்தினால் பயணிகள் அய்யோ அம்மா என அலறினார்கள். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது, 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசாவுக்குச் சென்று பாலசோர் ரயில் விபத்துக்குப் பின், நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் , காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்குச் சென்று ஆறுதல் கூறினார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, ரயில்களில் பயணம் செய்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாபெரும் சோகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமான உயிர் இழப்புகள் குறித்துப் பேசுகையில், காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் அரசு துணை நிற்கிறது.
இந்த துயரச் சம்பவம் குறித்து முறையான மற்றும் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தவறு இழைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா அரசு, உள்ளூர் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், இரவு முழுவதும் தொடர்ந்து மீட்பு பணிகளில் உதவுவதற்காக உழைத்தவர்களுக்கு பாராட்டுகள் என்றார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக ரத்ததானம் செய்ய வந்த ஏராளமான உள்ளூர் மக்களையும் அவர் பாராட்டினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தொடரவும், ரயில் பாதைகளை விரைவாக மீட்டெடுப்பதை உறுதி செய்யவும் ரயில்வே செயல்பட்டு வருகிறது என்றார் அவர். உள்ளூர் அதிகாரிகள், பேரிடர் மீட்புப் படைகளின் பணியாளர்கள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் உரையாடிய பிரதமர், சோகத்தைத் தணிக்க அரசு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu