இன்று அரசியல் சாசன தினம்: உச்சநீதிமன்ற விழாவில் பிரதமர் பங்கேற்பு
அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கொண்டாட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். மேலும் மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
1949-ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக் கொண்டதைக் குறிக்கும் வகையில், 2015-ஆம் ஆண்டு முதல் இந்த நாள் அரசியலமைப்பு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில், மின்னணு நீதிமன்ற திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம், நீதிமன்றங்களின் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப செயலாக்கத்தின் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறைக்கு சேவைகளை வழங்குவதற்கான முன்முயற்சியாகும்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை தெரிவிக்கும் விர்ச்சுவல் ஜஸ்டிஸ் க்ளாக், நீதிமன்ற மேலாண்மையை விளக்கும் ஜஸ்டிஸ் மொபைல் செயலி 2.0, டிஜிட்டல் நீதிமன்றம், பாதுகாப்பான இணையதள சேவைகள் போன்றவை பிரதமரால் தொடங்கப்படவுள்ள முன் முயற்சிகளில் அடங்கும்.
விர்ச்சுவல் ஜஸ்டிஸ் கடிகாரம் எனப்படும் மெய்நிகர் நீதிக் கடிகாரம் என்பது நீதிமன்ற அளவில் நீதி பரிபாலன அமைப்பின் முக்கிய புள்ளிவிவரங்களை வெளிப்படுத்தும் ஒரு முன்முயற்சியாகும். இது தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், தீர்வு காணப்பட்ட வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களை நாள், வாரம், மாதம் அடிப்படையில் நீதிமன்ற அளவில் வழங்குகிறது. நீதிமன்றத்தின் வழக்குத் தீர்ப்பின் நிலையைப் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதன் மூலம் நீதிமன்றங்களின் செயல்பாட்டைப் பொறுப்புணர்வுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் மாற்றுவதற்கான முயற்சியாகும். இது மாவட்ட நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் இந்த விவரங்களை பொதுமக்கள் அணுகலாம்.
நீதிமன்றத்தின் நிலுவைத் தன்மை மற்றும் தீர்ப்பை கண்காணிப்பதன் மூலம் வழக்குகளை திறம்பட நிர்வகித்தலுக்கு வழிவகுக்கும் ஜஸ்டிஸ் மொபைல் ஆப் 2.0 என்பது நீதித்துறை அதிகாரிகளுக்கான ஒரு உபகரணமாகும். இந்தச் செயலி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கானது. அவர்கள் தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலுவையில் உள்ள வழக்குகள், முடித்து வைக்கப்பட்ட/தீர்த்து வைக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களைத் தெரிந்து கொண்டு அவற்றைக் கண்காணிக்க முடியும்.
காகிதமில்லாத நீதிமன்றங்களுக்கு மாறுவதற்கு, நீதிமன்ற பதிவுகளை டிஜிட்டல் வடிவில் நீதிபதிக்குக் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முன்முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றம் என்பதாகும்.
S3WaaS இணையதளங்கள் என்பது மாவட்ட நீதித்துறை தொடர்பான குறிப்பிட்ட தகவல் மற்றும் சேவைகளை வெளியிடுவதற்கான இணையதளங்களை உருவாக்க, கட்டமைக்க, வரிசைப்படுத்த மற்றும் நிர்வகிப்பதற்கான ஒரு கட்டமைப்பாகும். S3WaaS என்பது பாதுகாப்பான, அளவிடக்கூடிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய வலைத்தளங்களை ஏற்படுத்துவதற்காக அரசாங்க நிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்ட சேவையாகும். பல மொழிகளில் உள்ள இந்தத் தகவல்ளை மக்களும், மாற்றுத்திறனாளிகள் போன்றோரும் எளிதில் அணுக முடியும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu