இந்தியாவை உலுக்கும் உருமாறிய மூன்று வகை கொரோனா வைரஸ்கள்..!

இந்தியாவை உலுக்கும் உருமாறிய மூன்று வகை கொரோனா வைரஸ்கள்..!
X
- விஞ்ஞானி மாரியப்பன் எச்சரிக்கை

இந்தியாவில் தற்போது மூன்று வகையான உருமாறிய கொரோனா வைரஸ்கள் மிகத் தீவிரமாக பரவி வருகின்றன. ஆகையால் பொதுமக்கள் மிக மிக எச்சரிக்கையுடன் இயங்க வேண்டும் என ஐ.சி.எம்.ஆர் ஓய்வு பெற்ற விஞ்ஞானி மாரியப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொசுக்கள் மற்றும் நுண்கிருமிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்ட ஐ.சி.எம்.ஆர் முன்னாள் விஞ்ஞானி மாரியப்பன் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது,

'இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இதற்கு காரணம் கனடா (B.1.1.7), தென்னாப்பிரிக்கா (B.1.351) மற்றும் பிரேசில் (P1) நாடுகளில் உருவான உருமாறிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது. உருமாறும் தன்மை கொண்ட இந்த வைரஸ் காரணமாகவே தற்போது இந்தியா மிக கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. இது குறித்த விரிவான அறிவியல் ஆய்வுகள் வெளியாகியுள்ளன.


குறிப்பிட்ட கொரோனா வைரஸ் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உருமாற்றங்களை உலக அளவில் நிகழ்த்தியுள்ளது. அவற்றில் மேற்காணும் 3 உருமாறிய வைரஸ்கள் தான் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஏறக்குறைய 450 மாதிரிகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த மூன்று முக்கிய கொரோனா வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ள என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமல்ல யுகே ஸ்ட்ரெயின் என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸ் ஒரே நேரத்தில் 20 நபர்களை தொற்றக்கூடிய வீரியம் மிக்கதாகும்.

இதனை தடுப்பதற்காக நமது மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இதற்காக பெரும் சிரத்தை எடுத்து இந்த வைரஸை அழிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால் பொதுமக்களாகிய நாம் ஒருங்கிணைந்து மத்திய மாநில அரசுகளுக்கு நாம் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனர் ஜெனரல் பல்ராம் உள்ளிட்ட விஞ்ஞானிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்ட பிறகே இந்திய பிரதமர் முடிவுகளை அறிவித்து வருகிறார்.

இந்த நோய்த்தொற்றை குறைப்பதற்கான முழு வாய்ப்பும் பொதுமக்களிடம் தான் உள்ளது. முகக் கவசம், கிருமிநாசினி பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவற்றை கண்டிப்பாக கடைபிடித்தல் அவசியம். கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து இருந்த நிலையில், தற்போது மிக வீரியமாக பரவக் காரணத்தை நாம் அறிய வேண்டும். இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இயங்கும் சர்வதேச விமான நிலையங்களையும் அங்கு வரும் வெளிநாட்டு பயணிகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பழைய முறைப்படி அவர்கள் அனைவரையும் குறைந்தது 14 நாட்கள் குறிப்பிட்ட இடத்தில் தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின், இந்தியாவிற்குள் அனுமதிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

வருகின்ற வெளிநாட்டு பயணிகளில் ஐந்து, பத்து மற்றும் 14 நாட்கள் கொரோனா தொற்றுடன் வருகை தரலாம். குறிப்பிட்ட சில நாட்கள் உள்ளுக்குள் வைரஸ் இருந்தாலும் நெகட்டிவ் ஆகவே நமது பரிசோதனையில் காண்பிக்கக் கூடும். ஆகையால் இதையெல்லாம் கணக்கில் கொண்டு மீண்டும் 14 நாட்கள் குறைந்தபட்சம் அவர்களை தனிமை படுத்துகின்ற முறையை செயல்படுத்த வேண்டும். அதேபோன்று கடல் மார்க்கமாக வருகின்ற நபர்களுக்கும் 14 நாள் தனிமைப்படுத்தலை செய்தல் அவசியம். உருமாறிய கொரோனா வைரஸ்களின் தீவிர தன்மையை உணர்ந்து இதனை உடனடியாக செயல்படுத்துவது அவசியம் என வேண்டுகோள் வைக்கிறார் விஞ்ஞானி மாரியப்பன்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்