குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது ரோகிணி ராக்கெட்

குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணில் சீறிப்பாய்ந்தது ரோகிணி ராக்கெட்

விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட்.

குலசேகரப்பட்டினத்தில் இருந்து விண்ணில் ரோகிணி ராக்கெட் சீறிப்பாய்ந்து பறந்துள்ளது.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னோட்டமாக இன்று குலசேகரப்பட்டினத்திலிருந்து ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள் அனைத்துமே ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் ஏவப்படுகிறது. காரணம் இந்த இடம் பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனால் இதைவிட பூமத்திய ரேகைக்கு நெருக்கமாக ஒரு இடம் இந்தியாவில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். அது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டனம் பகுதிதான். இங்கிருந்து ராக்கெட்களை ஏவும்போது, அது இலக்கை குறைந்த எரிபொருளை கொண்டு அடைந்துவிடும்.

எனவே இங்கு இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்னர், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை 100 சதவிகிதம் முடித்திருந்தது. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக இன்று ரோகிணி எனும் சிறிய வகை ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையத்தில் தயாரிக்கப்பட்ட 'ஆர்.எச்.200 சவுண்டிங்' ராக்கெட் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் குலசேகரன்பட்டினத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தளத்தின் சிறிய ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இந்திய ராக்கெட்டுகளுக்கு முன்னோடியான இந்த ஆர்.எச்.200 சவுண்டிங், காற்றின் திசை வேகத்தை அளவிட பயன்படுத்தப்படும். முன்னதாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதில், "துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரப்பட்டினம் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) ஏவுதள வளாகத்தில் இருந்து, உத்சேமாக 28.02.2024 முதல் 29.02.2024 வரை (காலை 09.30 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை) அட்ச தீரக்க ரேகைகளிலிருந்து (Launch pad Coordinates: Latitude - 08° 22′ North, Longitude - 78° 02′ East) ஒரு ரோகிணி ராக்கெட் (Rohini Sounding Rocket (RH-200)) ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ஸ்ரீஹரிகோட்டா Satish Dhawan Space Centre, SHAR) தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் மணப்பாடு கலங்கரை விளக்கத்திற்கும், பெரியதாழை தூண்டில் பாலத்திற்கும் இடையிலான கடற்கரையிலிருந்து 10 கடல் மைல் (18 கிலோ மீட்டர்) வரை கடலுக்குள் விரிந்து கிடக்கும் பகுதிகள் ஆபத்தான பகுதியாக இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இஸ்ரோ) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 28.02.2024 முதல் 29.02.2024 ( காலை 09.30 மணி முதல் மாலை 02.00 மணி வரை மீனவர்கள் / பொதுமக்கள் சிறிய கப்பல்கள், மீன்பிடி படகுகள், மற்ற படகுகள், கட்டுமரம் வழியாக மேற்படி பகுதிக்குள் நுழைய வேண்டாம்" என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் பூமியிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவுக்கு சென்று பின்னர் வங்க கடலில் விழுந்துவிடும்.

Tags

Next Story