ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த அறிக்கையை சமர்ப்பித்த உயர்நிலைக் குழு

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த அறிக்கையை முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையிலான உயர்நிலைக் குழு சமர்ப்பித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை தெரிவிப்பதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து தனது அறிக்கையை சமர்ப்பித்தது.
18,626 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 2 அன்று குழு அமைக்கப்பட்டதிலிருந்து 191 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிப் பணிகள், தொடர்புடையவர்கள், நிபுணர்களுடனான விரிவான ஆலோசனைகள் குறித்து இடம்பெற்றுள்ளது.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் முதன்மைச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ஊழல் தடுப்பு கண்காணிப்பு முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இக்குழுவின் மற்ற உறுப்பினர்களாவார்கள்.
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் சிறப்பு அழைப்பாளராகவும், டாக்டர் நிதின் சந்திரா உயர்மட்ட குழுவின் செயலாளராகவும் இருந்தனர்.
பல்வேறு தரப்பினரை இக்குழு சந்தித்து கருத்துக்களைப் கேட்டறிந்து விரிவான ஆலோசனைகளை நடத்தியது. 47 அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் சமர்ப்பித்தன. அவற்றில் 32 கட்சிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்தன.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்பிற்கு, நாடு முழுவதிலுமிருந்து 21,558 பதில்கள் மக்களிடமிருந்து பெறப்பட்டன. இதில் 80 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் நான்கு முன்னாள் தலைமை நீதிபதிகள், பன்னிரண்டு பெரிய உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள், நான்கு முன்னாள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர்கள், எட்டு மாநில தேர்தல் ஆணையர்கள் மற்றும் இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் போன்ற சட்ட வல்லுநர்கள் இந்த குழுவால் நேரில் அழைக்கப்பட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் கருத்தும் கேட்கப்பட்டது.
சி.ஐ.ஐ., ஃபிக்கி, அசோசெம் போன்ற உயர்மட்ட வணிக அமைப்புகள் மற்றும் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் பல தேர்தல்களின் பொருளாதார விளைவுகள் குறித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu