கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் சிக்கிய முன்னாள் முதல்வர்
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மற்றும் நொறுங்கிய நிலையில் அவர் பயணம் செய்த கார்.
காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவின் கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு கடந்த ஆண்டு அந்த சிறப்பு சட்டத்தை நீக்கம் செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்திற்கான மாநில அந்தஸ்தும் ரத்து செய்யப்பட்டு ஜம்மு, லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த முடிவிற்கு காஷ்மீர் மாநில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது போராட்டங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தான் அங்கு நடைபெற்ற ஒரு விபத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி. இவர் பிடிபி எனும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று மெகபூபா முப்தி தனது கருப்பு நிற காரில் அனந்தநாக் மாவட்டம் கானாபால் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்
இந்த கார் சங்கம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று மெகபூபா முப்தி சென்ற காரும், இன்னொரு காரும் மோதிக்கொண்டன. இதில் 2 கார்களும் சேதமடைந்தன. குறிப்பாக மெகபூபா முப்தி சென்ற காரின் முன்பக்கம் நொறுங்கியது. இதில் அவரது கார் டிரைவர் மற்றும் பாதுகாப்பு பணிக்கு சென்ற போலீஸ்காரருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் மெகபூபா முப்தி அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். இதையடுத்து டிரைவர், போலீஸ்காரர் ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மெகபூபா முப்தி இன்னொரு காரில் ஏறி அனந்தநாக் மாவட்டம் கானாபால் பகுதிக்கு சென்றார். நேற்று கானாபால் பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்றபோது தான் இந்த விபத்து நடந்தது.
இதுபற்றி மெகபூபா முப்தியின் மகள் இல்டிஜா முப்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛அனந்தநாக் நோக்கி சென்ற மெகபூபா முப்தியின் கார் பயங்கர விபத்தில் சிக்கியது. இருப்பினும் அவரும், அவரது பாதுகாவலர்களும் கடவுளின் கருணையால் படுகாயங்கள் ஏதுமின்றி தப்பி உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu