நிறைவடையும் நிலையில் தாமிரபரணி, கருமேனியாறு, நந்தியாறு இணைப்பு: மத்திய அமைச்சர்

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா.
தமிழ்நாட்டில் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் பி வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துள்ள அமைச்சர், சாகுபடி நிலத்தின் பரப்பளவை விரிவுபடுத்தும் வகையில் பாசனத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் வறட்சிக்கு இலக்காகும் சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய பகுதிகளில் பாசன வசதியை ஏற்படுத்த தாமிரபரணி, கருமேனியாறு, நந்தியாறு ஆகிய நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 23,040 ஹெக்டர் நிலத்திற்கு பாசன வசதி அளிக்கும் இத்திட்டம் நிறைவடையும் நிலையை அடைந்துள்ளது என்றும் இதுவரை 19,856 ஹெக்டர் நிலப்பரப்புக்கு பாசனவசதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.34.74 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
நிலத்தடி நீர் பாசனத் திட்டத்தின் கீழ் 166 கிணறுகளை அமைக்க ரூ.5.36 கோடியும் சிறுபாசனத் திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை தூர் வாரி பராமரிக்க ரூ.107.22 கோடியும் மத்திய அரசால் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல் என்னும் பிரதமரின் நுண்ணீர் பாசனத்திட்டத்தின் ஒரு பகுதித் திட்டம் 2022-23-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், தமிழ்நாட்டின் குறு பாசனத் திட்டத்தின் கீழ் 10.98 லட்சம் ஹெக்டேர் நிலபரப்பு பயனடையும் வகையில் மத்திய அரசு ரூ.2,365.24 கோடியை வழங்கியுள்ளது என அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்
2024-ஆம் ஆண்டு பருவத்தில் மத்திய அரசின் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரைத் தேங்காய் மற்றும் தோல் நீக்கிய தேங்காயை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசிடமிருந்து கோரிக்கை எதுவும் வரவில்லை என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா கூறியுள்ளார்.
மாநிலங்களவையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் வைகோ மற்றும் எம் சண்முகம் ஆகியோர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், பிரதமரின் ஆஷா திட்டத்தின் கீழ், நியாயமான சராசரி தரம் வாய்ந்த எண்ணெய் வித்துக்கள், கொப்பரைத் தேங்காய் போன்றவற்றை தேசிய வேளாண் கூட்டுறவு, சந்தைப்படுத்துதல், கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு, நுகர்வோர் கூட்டுறவு ஆகியவற்றின் மூலம் கொள்முதல் செய்வதாகத் தெரிவித்தார். மாநில அரசுகள் நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ், சந்தைவிலை குறையுமானால் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் மாநில அரசுகள் கொள்முதல் செய்ய கோரிக்கை வைப்பது உண்டு என அவர் தெரிவித்தார்.
சராசரி தரம் கொண்ட அரவைக் கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 11,160 ரூபாய் எனவும், முழு கொப்பரைத் தேங்காயின் விலை குவிண்டாலுக்கு 12,000 ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வேளாண் செலவுகள் மற்றும் விலைகள் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, அரவைக் கொப்பரைத் தேங்காய்க்கு 51.84 சதவீதமும், முழு கொப்பரைத் தேங்காய்க்கு 63.26 சதவீதமும் லாபம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தமது பதிலில் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu