லோக்சபா தேர்தலில் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட திட்டம்?
டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் சவுந்திரராஜன் (கோப்பு படம்).
Tamilisai Contest In Pondicherry?
பாண்டிச்சேரியில் கவர்னராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜ சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தமிழிசை தெரிவிக்கும்போது புதுச்சேரி வளர்ச்சிக்காகவே அமைச்சர்அமித்ஷாவை சந்தித்ததாக அவர் விளக்கம் தெரிவித்துள்ளார்.பாண்டிச்சேரியில் என்ஆர் காங்கிரசுடன் பாஜ கூட்டணி ஆட்சியானது நடந்து வருகிறது. அங்கு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். பாண்டிச்சேரியில் ஒரே ஒரு லோக்சபா தொகுதி உள்ளது. இதற்கு பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் களம் இறங்குவார்கள் என தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் பாஜ மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆலோசனை நடத்தி இதனை உறுதி செய்தார். மக்களிடம் நன்கு அறிமுகமான ஒருவரை வேட்பாளராக அறிவிக்கும்படி முதல்வர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
பாண்டிச்சேரி ஒரு தொகுதியைப் பொறுத்தவரை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கவர்னர் தமிழிசை, ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், ஆகியோரில் ஒருவரை களமிறக்கலாம் எனும் எதிர்பார்ப்பானது எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழிசை சந்தித்து பேசியதால் இது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பேசியிருக்கலாம் என்ற தகவல் பரவி வருகிறது.பாண்டிச்சேரி, தென்சென்னை, திருப்பூர், திருநெல்வேலி, ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் போட்டியிடுவார் என தமிழிசை ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டில்லியிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நான் டில்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியது திடீர் சந்திப்பு அல்ல. ஏற்கனவே திட்டமிடப்பட்ட சந்திப்புதான். அமித்ஷாவை சந்தித்ததற்கும் பஞ்சாப் கவர்னர் ராஜினாமாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் பாண்டிச்சேரி மாநில வளர்ச்சி திட்டம் பற்றிதான் ஆலோசனை செய்ததாக தெரிவித்தார்.
பாண்டிச்சேரி சட்டசபையில் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட்டில் மாநிலத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மாநில வளர்ச்சிக்காக கூடுதல் நிதியினை ஒதுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரிடம் செய்தியாளர்கள் தேர்தல் அரசியலில் நீங்க ஈடுபடுவீர்களா எ ன கேட்டதற்கு ஆண்டவனும் ஆண்டு கொண்டிருப்பவர்களும் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu