தேர்தல் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி வெளியிடாததற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கு குறித்த விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டு உள்ளது, எந்தெந்த கட்சிகள் எவ்வளவு நிதி பெற்று உள்ளன, எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு தேர்தல் பத்திரங்களை பெற்று உள்ளன, உள்ளிட்ட விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 12ஆம் தேதிக்குள் எஸ்பிஐ வங்கி வழங்க உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டது.
இதையடுத்து எஸ்பிஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திர தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22 ஆயிரத்து 217 தேர்தல் பத்திரங்கள் விநியோகிப்பட்டு உள்ளதாகவும், அவற்றில் 22 ஆயிரத்து 30 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த பட்டியலில் பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனம் அதிகபட்சமாக ஆயிரத்து 368 கோடி ரூபாயை தேர்தல பத்திரம் மூலம் நன்கொடையாக வழங்கி உள்ளதும் தெரியவந்தது.
அதேபோல் மேகா என்ஜினீயரிங் லிட் என்ற நிறுவனம் 966 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக வழங்கி இருப்பது தெரியவந்து உள்ளது. தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தேர்தல் பத்திர தரவுகளில், குறிப்பாக பத்திர எண்கள் வெளியிடப்படவில்லை என்றும், பத்திர எண்களை கொண்டே எந்த நிறுவனம் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு நன்கொடை வழங்கி இருப்பது கண்டுபிடிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளை தேர்தல் ஆணையத்திற்கு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் பத்திர எண்களை எஸ்பிஐ வங்கி ஏன் வெளியிடவில்லை எனக் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அது குறித்து வரும் திங்கட்கிழமை (மார்ச்.18) வங்கி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு நீதிபதிகள் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu