நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்: இஸ்ரோ

நாளை விண்ணில் பாய்கிறது எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட்: இஸ்ரோ
X

பைல் படம்.

இஸ்ரோ சார்பில் நாளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

வளரும் நாடுகள், சிறிய செயற்கைக்கோள் உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்கை கோள்களை பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இஸ்ரோ எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்களை உருவாக்க தொடங்கியுள்ளது. இஸ்ரோ சார்பாக இதுவரை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி போன்ற ராக்கெட் மூலம் அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட நிலையில் எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்கள் 500 கிலோவிற்கு குறைவான செயற்கை கோள்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக எஸ்எஸ்எல்வி டி1 ரக ராக்கெட்டை வடிவமைத்தை இஸ்ரோ கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஆனால் புவியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும் போது சென்சார் செயலிழப்பின் காரணமாக செயற்கைக்கோள்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், விரைவில் எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட் உருவாக்கப்படும் என இஸ்ரோவின் தலைவர் சோம்நாத் அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை காலை 9:18 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட் 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகள் மற்றும் பரிசோதனை நிலைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு உள்ளன.

இஸ்ரோவின் இஓஎஸ்-07(EOS-07), அமெரிக்க நிறுவனமான அன்டாரிஸ் ஜானுஸ்-1 மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்பேஸ்கிட்ஸ் விண்வெளி நிறுவனத்தின் ஆசாதிசாட்-2 (AzaadiSAT-2) என மொத்தமாக 175.2 கிலோ எடை கொண்ட மூன்று செயற்கைக்கோள்களை புவி வட்ட சுற்றுப்பாதையில் 450 கிலோமீட்டர் உயரத்தில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி செலுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தோல்வி அடைந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட எஸ்எஸ்எல்வி டி2 ரக ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தும் முனைப்பில் இஸ்ரோ உள்ளது. மேலும் இதில் முக்கிய சிறப்பம்சமாக ஆசாதிசாட்-2 செயற்கைக்கோள் நாடு முழுவதும் 75 பள்ளிகளைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 750 கிராமப்புற மாணவிகளுக்கு பயிற்சி அளித்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!