Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவக்கம்; புதிய நாடாளுமன்றத்திற்கு முறைப்படி மாற்றம்

Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவக்கம்;  புதிய நாடாளுமன்றத்திற்கு  முறைப்படி மாற்றம்

Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது. (கோப்பு படம்)

Parliament begins today- நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்க உள்ளது. இதில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு அலுவல்கள் முறைப்படி மாற்றப்பட உள்ளன

Parliament begins today,Special session- பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்க உள்ளது. இதில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுத்து, புதிய நாடாளுமன்றத்திற்கு அலுவல்கள் முறைப்படி மாற்றப்பட உள்ளன. அதோடு, சர்ச்சைக்குரிய மசோதாக்களையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளும் வியூகம் அமைத்துள்ளன.

நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும், பட்ஜெட், மழைக்காலம் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என 3 முறை கூடுவது வழக்கம். கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 18 முதல் 22ம் தேதி வரை 5 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்படும் என கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி ஒன்றிய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. எதற்காக சிறப்பு கூட்டத்தொடர் என எந்த தகவலும் தெரிவிக்கப்படாததால், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்றம் செய்வது, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த இந்த சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டிருக்கலாம் என கணிப்புகள் வெளியாகின.

இதற்கிடையே, சிறப்பு கூட்டத்தொடரில் 75 ஆண்டு கால நாடாளுமன்றத்தின் வரலாற்று பயணம் குறித்து விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா உள்ளிட்ட 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் கடந்த 4 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில் 5 நாள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி, அனைத்து கட்சி கூட்டத்தை ஒன்றிய அரசு நேற்று நடத்தியது. இதில், பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் மணிப்பூர் விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், சிறப்பு கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டது. இதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட வேண்டுமென ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். ஆனாலும் அனைத்து கட்சி கூட்டத்திலும், சிறப்பு கூட்டத்தொடரின் அலுவல்கள் குறித்து அரசு வெளிப்படையாக எந்த தகவலையும் வெளியிடவில்லை என எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.

கூட்டத்திற்குப் பின் கேரள காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே.மணி அளித்த பேட்டியில், ‘‘அரசு எதையோ மறைக்கிறது. இதுவரை சிறப்பு கூட்டத்தொடரின் அலுவல் பட்டியல் குறித்து முழுமையாக தகவல் தெரிவிக்கவில்லை’’ என்றார். இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்த கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும். அரசு தனது அலுவல் பட்டியல்களின்படி சிறப்பு கூட்டத்தொடரை நடத்தும்’’ என்றார்.

இன்றைய முதல் நாள் கூட்டத்தில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்பட உள்ளது. இதில், நாடாளுமன்ற சாதனைகள், அனுபவங்கள், நினைவுகள் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்படும். இதைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினமான இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அரசு அலுவல்கள் முறைப்படி மாற்றப்பட உள்ளன. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் திறந்து வைத்தார். இன்று முதல் புதிய நாடாளுமன்றம் செயல்படத் தொடங்கும்.

மேலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா, வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, பத்திரிகைகள் மற்றும் பதிவு மசோதா, அஞ்சல் அலுவலக மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட உள்ளன. பட்டியலிடப்பட்ட மசோதாக்களை தாண்டி வேறு மசோதாக்களையும் தாக்கல் செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு. எனவே அதை பயன்படுத்தி அறிவிக்கப்படாத சர்ச்சைக்குரிய மசோதாக்கள் சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.

குறிப்பாக, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, பொது சிவில் சட்டம், நாட்டின் பெயர் மாற்ற மசோதா, முன்கூட்டியே மக்களவை தேர்தலை நடத்துவது போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்களை அரசு கொண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஏனெனில் ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ள மசோதாக்கள் அனைத்துமே சாதாரணமானவை. அவற்றை சிறப்பு கூட்டத்தொடர் நடத்தி நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.அதே சமயம், எதிர்க்கட்சிகளைப் பொறுத்த வரையில், மணிப்பூர் விவகாரம், நாட்டின் பொருளாதாரம், விலைவாசி உயர்வு, சீனா விவகாரம், அதானி குழுமம் மீதான முறைகேடு புகார் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளன.

அரசு சர்ச்சைக்குரிய மசோதாக்களை கொண்டு வந்தாலும் அதை முறியடிப்பதற்கான வியூகங்களையும் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. இதற்கிடையே மக்களவை செயலகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் செவ்வாய்கிழமை(நாளை) காலை 9.30 மணிக்கு குழு புகைப்படம் எடுத்துக் கொள்ள வர வேண்டும். புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைய அனைத்து உறுப்பினர்களுக்கும் புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய 4 மசோதாக்கள்

சிறப்பு கூட்டத்தொடரின் போது, ​​தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களின் நியமனம் தொடர்பான மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதே போல் மக்களவையில் வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023 மற்றும் பத்திரிகை மற்றும் காலப் பதிவு மசோதா 2023 ஆகியவை தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ம் தேதியன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. இவை தவிர தபால் அலுவலக மசோதா 2023 இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட உள்ளது.

* இந்திய ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் பழைய நாடாளுமன்ற கட்டிடம் பல்வேறு சட்டங்களை இயற்றி, சாதனைகளை படைத்த வரலாற்றை கொண்டுள்ளது.

* கடந்த 1927ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி அப்போதைய வைஸ்ராய் லார்ட் இர்வின் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைத்தார்.

* 96 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த கட்டிடம், சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

* புதிய நாடாளுமன்ற கட்டிடம் முக்கோண வடிவில் 4 மாடிகளுடன் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

* புதிய நாடாளுமன்றத்தில் தேசியக் கொடியேற்றம்

இன்று தொடங்கும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் புதிய நாடாளுமன்றத்திற்கு அலுவல்கள் மாற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதையொட்டி நேற்று, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் துணை ஜனாதிபதி தன்கர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கடைசி நேரத்தில் கிடைத்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக ஐதராபாத்தில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற கார்கேவுக்கு கடந்த 15ம் தேதி அழைப்பிதழை மத்திய அரசு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story